போலீஸ் நிலையங்களில் காலியிடங்கள் நிரப்பப்படுமா
புவனகிரி, : புவனகிரி மற்றும் மருதுார் போலீஸ் நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சிதம்பரம் உட்கோட்டத்திற்குட்பட்ட புவனகிரி மற்றும் மருதுார் போலீஸ் நிலையங்களில், போலீஸ் நிலையம் துவக்கப்பட்ட காலத்திய எண்ணிக்கையிலேயே போலீசார் பணியிடம் உள்ளது. குறைந்த அளவில் உள்ள போலீசார் இதர போலீஸ் நிலையங்களுக்கு மாற்றுப்பணி, கோர்ட், கலால் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் சொற்ப அளவிலுள்ள போலீசார் பணிச்சுமையாலும், விடுமுறை இல்லாமலும் மிகுந்த மன உளைச்சலில் பணிபுரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், பாதுகாப்பு பணியில் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, இரு போலீஸ் நிலையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப புதியதாக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்படும் போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர்.