சேவல் சண்டை சூதாட்டம் செல்வபுரத்தில் எட்டு பேர் கைது
கோவை : செல்வபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.
கத்தி கட்டிய சேவல் சண்டை, சேவல் சூதாட்டம் நடந்த அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் பல்வேறு பகுதிகளில் சேவல் சண்டை நடக்கிறா என சோதனை செய்தனர். நேற்று முன்தினம் செல்வபுரம் போலீஸ் எஸ்.ஐ., தினேஷ் பாபு வேளாண் பல்கலை பின்புரம் உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில், சோதனை மேற்கொண்டார்.
அங்கு, சிலர் கூடியிருந்தனர். அவர்களிடம் சென்ற போது, அவர்கள் பணம் வைத்து சேவல் நடத்தியது தெரியவந்தது. அங்கிருந்த 17 வயது சிறுவன் உட்பட எட்டு பேரை கைது செய்தனர்.
இரண்டு சேவல்கள், பணம், ஐந்து இரு சக்கர வாகனங்கள், மொபைல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.