முதலில் மாட்டை அவிழ்த்து விடுவது யார்? எருது விடும் விழாவை நிறுத்திய கிராமத்தினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த அகரம் கிராமத்தில், யார் மாட்டை முதலில் விடுவது என்ற மோதலால், எருதுவிடும் விழாவை கிராம மக்கள் நிறுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்து அகரம் பஞ்.,ல், 5,036 பேர் வசிக்கின்றனர். இதில், 180 குடும்பங்களை சேர்ந்த ஒருபிரிவினர் அடங்குவர். அவர்கள் சார்பில் இங்கு, ஆண்டுதோறும் எருது விடும் விழா நடப்பது வழக்கம். தொடர் வழக்கத்தின் படி, மற்றொரு பிரிவினர், 180 குடும்பத்தை சேர்ந்தவர்களிடம், உங்களில் ஒருவரது மாட்டை முதலில் விடக்கூறி, அழைப்பு விடுப்பர்.

கடந்த ஆண்டுகளில் அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் காளையை, எருதுவிடும் விழாவில் முதலாவதாக ஓட வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில், முன்னாள் தட்ரஹள்ளி பஞ்., தலைவர் ரமேஷ், தன் மாட்டை இம்முறை முதலில் ஓட விடும்படி கூறியுள்ளார். மேலும், பல ஆண்டுகளுக்கு முன், தன் முன்னோர் வசமிருந்த வழக்கத்தை, பங்காளிகளான சிவலிங்கம் தரப்புக்கு, நாங்கள் தான் விட்டு கொடுத்தோம். இம்முறை நாங்களே முதல் காளையை விடுவோம் எனக்கூறியுள்ளனர்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, சமாதானப்படுத்த முயன்ற போலீசார் முன்பே தகராறில் ஈடுபட்டனர். முடிவில், ஆண்டுக்கு ஒரு தரப்பினர் தங்கள் மாடுகளை விடலாம் என முடிவு செய்தபோதும், அங்கு கூடியிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து எருதுவிடும் விழாவை நிறுத்துவதாக, அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். மாட்டை யார் விடுவது என்ற தகராறில், எருதுவிடும் விழா நிறுத்தப்பட்டது.

Advertisement