சலுகை பயணக்கட்டண அட்டை அவகாசம் நீட்டிக்க கோரிக்கை
கோவை. : கல்லூரி மாணவர்களுக்கான சலுகை பயண கட்டணம் செலுத்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள், இன்ஜி., நர்சிங், பாராமெடிக்கல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக்குகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு, அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணிக்க, 50 சதவீத சலுகை கட்டணத்தில், பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன.
அட்டையை ஒரு கல்வியாண்டு முழுமைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயணிக்கும் தொலைவுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படும். அக்கட்டணத்தை மாதம் தோறும், 15ம் தேதிக்குள் செலுத்தி, அதற்கான சலுகை பயண கட்டண அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில் அந்த மாதத்தில், பயணிக்க முடியாத சூழல் ஏற்படும். பொங்கல் விடுமுறை காரணமாக ஜன., 14, 15 ஆகிய இரு தினங்கள், சலுகை பயண கட்டண அட்டை பெரும் கவுன்டர்கள் மூடப்பட்டிருந்தன. அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜன., 11 முதல் 17 ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை கழிப்பதற்கு அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு மாணவர்கள் சென்றுள்ளனர்.
மாணவர்கள் நலன் கருதி, சலுகை பயண கட்டண அட்டைக்கான கட்டணத்தை செலுத்த, அவகாசம் வழங்க வேண்டும் என மாணவர்கள், அரசு போக்குவரத்து கழகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.