பஜாரில் தெரு நாய் தொல்லை நாள்தோறும் மக்களுக்கு 'பேஜாரு'

பந்தலுார் : பந்தலுார் பஜாரில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், பாதசாரிகள் அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பந்தலுார் பஜார் பகுதி கால்நடைகளின் மேய்ச்சலுக்கு பிரபலமான பகுதியாக மாறி வருகிறது. பகல் இரவு என எந்த நேரங்களிலும் சாலைகள் மற்றும் கடைகள் முன்பாக கால்நடைகள் அதிகளவில் முகாமிட்டு உள்ளது. இதனை கட்டுப்படுத்த நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம், முன் வராத நிலையில், மக்கள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெரு நாய்களின் தொல்லையும் அதிகரித்து வருகிறது. சாலைகளில் உலா வரும் தெரு நாய்கள், திறந்த வெளியில் கொட்டப்படும் மீன் மற்றும் இறைச்சி கழிவுகளை உட்கொண்டு, நோய் பாதிக்கப்பட்ட நிலையில் உலா வருகின்றன.

பல்வேறு இடங்களிலும் தெரு நாய்கள் கடித்து, பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பந்தலுார் பஜாரில், அதிகரித்து வரும் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.

இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் பாதசாரிகள், தெருநாய் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை தொடர்கிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த முன் வர வேண்டும்.

Advertisement