சிட்டி கிரைம்

தந்தையை கத்தியால் குத்தியவர் கைது



சீரநாயக்கன்பாளையம், திலகர் நகரை சேர்ந்தவர் ராமதாஸ், 52; இவரின் மகன் ரஞ்சித், 25. ரஞ்சித் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். தினமும் குடித்து விட்டு வந்து, பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார். இரு நாட்களுக்கு முன் மதியம், மது குடிக்க தனது தாயிடம் பணம் கேட்டார். இதை பார்த்த ராமதாஸ், ரஞ்சித்தை கண்டித்தார்.

ஆத்திரமடைந்த ரஞ்சித், மறைத்து வைத்திருந்த கத்தியால், ராமதாசின் இடுப்பு பகுதியில் குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். புகாரின்படி, ஆர்.எஸ்.புரம் போலீசார் ரஞ்சித்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

வாடகை கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்



ரத்தினபுரி, புதுப்பாலம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி, 46. இவர் வீட்டில் ஐயப்பன், 32 கடந்த ஐந்து ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐயப்பன் வாடகை பணம் கொடுக்காமல் இருந்துள்ளார்.

கடந்த 12ம் தேதி ஐயப்பன் மற்றும் துரைசாமி ஆகியோர் ஒன்றாக மது அருந்தினர். அப்போது, துரைசாமி வாடகை குறித்து கேட்க, இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, மறுநாள் காலை துரைசாமியை பார்த்த ஐயப்பன் 12ம் தேதி நடந்த வாக்குவாதம் குறித்து கேட்டு பிரச்னை செய்தார். அருகில் இருந்த கட்டையால் துரைசாமியை தாக்கினார். துரைசாமி ரத்தினபுரி போலீசில் புகார் அளிக்க, போலீசார் ஐயப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏ.டி.எம்., பேட்டரி திருடியவர் கைது



சிங்காநல்லுார், சண்முகா நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார், 43. ஏ.டி.எம்., இயந்திரம் பராமரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 13ம் தேதி ரமேஷ் குமார், தன்னுடன் பணியாற்றும் ஜோஸ்வா ஆகியோர் ஆவாரம்பாளையம், பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு சென்றனர்.

அதிலிருந்த இரண்டு பேட்டரிகள் திருட்டு போயிருந்தன. பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தனர். பேட்டரி திருட்டில் ஈடுபட்டது, செங்காடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார், 48 என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தண்ணீர் தொட்டியில் விழுந்து பெண் பலி



வடவள்ளி, மாசாணியம்மன் அவென்யூவை சேர்ந்தவர் கணேசன், 52; மனைவி சிவகாமி, 48. கடந்த 12ம் தேதி இரவு 7:00 மணிக்கு, கணேசன் காய்கறி வாங்க கடைக்கு சென்றார். திரும்பி வந்தபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.

அப்போது, சிவகாமி வீட்டில் இல்லாததால் அக்கம் பக்கத்தில் தேடினார். திறந்து இருந்த வீட்டின் தண்ணீர் தொட்டியில், சிவகாமி விழுந்திருப்பது தெரிந்தது. அவரை மீட்டு அருகில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Advertisement