'காலநிலை மாற்றத்தின் தாக்கம் மக்களால் உணரப்படுகிறது' பள்ளியில் நடந்த கருத்தரங்கில் தகவல்
கோத்தகிரி : 'காலநிலை மாற்றத்தின் தாக்கம் பொதுமக்களால் தற்போது உணரப்படுகிறது,' என, பள்ளியில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
கோத்தகிரி ஈளாடா அரசு மேல்நிலைப் பள்ளியில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்ம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
'நீலகிரி-2025' ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் இயக்குனர், ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: காலநிலை மாற்றத்தின் தாக்கம், பெருமளவில் பொதுமக்களால் தற்போது உணரப்படுகிறது. உலக அளவில், 400 கோடி மக்கள் புவி வெப்பத்தை உணருவதாக தெரிவித்துள்ளனர். பல்லுயிர்களின் எண்ணிக்கை, 1970ம் ஆண்டில் இருந்து, 69 சதவீதம் குறைந்துள்ளது. புவி வெப்பத்தின் காரணமாக, உள்ளூர் மக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. உள்ளூர் தாவரங்கள் 'கார்பனை' உட்கொள்ள சிரமப்படும். ஆனால், வெளிநாட்டு தாவரங்கள் அதிக கார்பனை உட்கொண்டு அதிவேகமாக வளரும்.
இதனை ஊர்ஜிதப்படுதம் விதமாக, நீலகிரி மாவட்டத்தில் கூட, 'சிஸ்ட்ரம் ரொபஸ்டிகம்' என்ற தென் அமெரிக்க களை செடியும், 'லேண்டானம் கேமரா' என்ற உண்ணி செடியும் மிக வேகமாக பரவி வருகின்றன. 'நம் நாட்டின் தலைநகரமான டில்லியும், சுற்றியுள்ள, 6 நகரங்கள் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்றவை,' என ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. காலநிலை மாற்றத்தின் மற்றொரு சிக்கல் ஒளி மாசு. அரசு அலுவலகங்கள் மற்றும் ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிக அளவு மின்விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஒளியில் வேலை செய்பவர்களுக்கு ரத்த அழுத்தம், 8 புள்ளிகள் அதிகரிப்பதுடன், பாலியல் குறைபாடுகளும் ஏற்படும்.
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில், 30 சதவீதம் இந்த ஒளி மாசு காரணம் என ஆய்வு கூறுகிறது. காலநிலை தாக்கத்தை குறைக்க, மக்கள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றி கொள்ள வேண்டும். அனைவரும் சேர்ந்து சுற்றுச்சூழலை காக்க முன் வர வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. ஆசிரியை கீதா வரவேற்றார். ஆசிரியை பிரேமலதா நன்றி கூறினார்.