பல்வேறு போட்டிகளில் வெற்றி -மாணவர்களுக்கு பரிசளிப்பு
பந்தலுார் : தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில், அனைத்து பள்ளிகளுக்கு இடையே கலை திருவிழா போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டது.
அதில், பந்தலுார் அருகே தேவாலா அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், நான்கு போட்டிகளில் மாநில அளவில் பங்கேற்றனர். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் யோகனஸ்ரீ; பல குரல் போட்டியில் ரஞ்சித் குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும், வீதி நாடகம், பரதநாட்டியம் ஆகிய போட்டிகளிலும் மாணவ, மாணவியர் குழுவினர் முத்திரை பதித்தனர். சாதித்த மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. ஆசிரியர் முருகன் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் தலைமை வகித்து, கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். கூடலுார் அரசு கலைக்கல்லுாரி உதவி பேராசிரியர் மகேஸ்வரன் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார். மனவளக்கலை மன்ற தலைவர் ஹரிஹரன், சமூக ஆர்வலர் காளிமுத்து, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சிவனேசமலர், ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் சுஜாதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் தவமுரளி நன்றி கூறினார்.