திருப்புவனத்தில் தினசரி போக்குவரத்து நெரிசல்: தீர்வு தான் எப்போது

திருப்புவனம்: திருப்புவனத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ரோட்டில் நடந்து செல்லவே மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

வளர்ந்து வரும் நகரமாக திருப்புவனத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நாளுக்கு நாள் புதுப்புது குடியிருப்பு உருவாகி வரும் நிலையில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. திருப்புவனத்தில் மட்டும் சுமார் ஐந்தாயிரம் டூவீலர்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் திருப்புவனத்திற்கு டூவீலரில் வந்து செல்கின்றனர்.

இதுதவிர கார், வேன், ஷேர் ஆட்டோ, லாரி, ஆம்புலன்ஸ் , டிரை சைக்கிள் என வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வாகனங்கள் பயன்பாட்டில் இருந்தும் அதற்கு ஏற்ப சாலை விரிவாக்கம் செய்யப்படவே இல்லை. அதற்கு மாற்றாக ஆக்கிரமிப்பு அதிகரித்து சாலை குறுகி விட்டது. ஆக்கிரமிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் , தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட எந்த வாகனங்களும் நகர்ப்பகுதிக்குள் வந்து செல்ல முடியவில்லை. சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசல் உள்ள நிலையில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில் நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. திருப்புவனத்தில் நடந்து செல்லவே அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் திருப்புவனத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படவே இல்லை. ஒவ்வொரு வருடமும் வருவாய்துறை, பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை ஆகிய துறையினரிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் ஆக்கிரமிப்பு அகற்றப்படவே இல்லை. நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்தாண்டு அளவீடு செய்யப்பட்டும் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement