சிங்கம்புணரி மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் நடந்த மஞ்சுவிரட்டில் ஏராளமான காளைகள் சீறிப்பாய்ந்தன.
இங்கு மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். நேற்று வழக்கம்போல் காலை 11:00 மணி முதல் சீரணி அரங்கம் மற்றும் பெரிய கடைவீதியில் கட்டுமாடுகள் அவிழ்க்கப்பட்டன. தொடர்ந்து கிராம தொழுவில் சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் காளைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு திறந்து விடப்பட்டன. பெரிய கடை வீதியில் ஓடிவந்த கோயில் மாடுகளை வீரர்கள் தொட்டு வணங்கினர்.
இதைத்தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்க்கப்பட்டன. அக்காளைகளை வீரர்கள் போட்டி போட்ட பிடிக்க முயன்றனர். இதில் ஒரு சில மாடுகள் பிடிபட்டன. அ.காளாப்பூர், மு.சூரக்குடி, முறையூர், சதுர்வேத மங்கலம், பிரான்மலை ஆகிய பகுதிகளிலும் நேற்று மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இப்பகுதியில் நடந்த மஞ்சுவிரட்டில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.