சம்பைப்பட்டி ரோட்டை புதுப்பிக்க கோரிக்கை
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே சம்பைப்பட்டிக்கு செல்லும் ரோடு அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் ரோடு சேதமடைந்து போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது.
திருப்புத்துார் அருகேயுள்ள குக்கிராமம் சம்பைப்பட்டி. இக்கிராமத்தினர் பெரும்பாலானோர் விவசாயத் தொழிலாளர்களே. திருப்புத்துாரிலிருந்து பட்டமங்கலம் செல்லும் ரோட்டிலிருந்து விலக்கு ரோடாக சம்பைப்பட்டிக்கு ரோடு செல்கிறது. இந்த ரோடு அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இதனால் குண்டும் குழியுமாக மண் ரோடாக மாறி விட்டது.
இக்கிராமத்தினர் வாகனப் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். ரோட்டை புதுப்பிக்க நீண்ட காலமாக கோரிக்கை வைத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த ரோட்டை இக்கிராமத்தினர் மட்டுமின்றி இங்குள்ள வயல்களில் விவசாய வேலை காரணமாக திருப்புத்தூர்,தென்மாப்பட்டு உள்ளிட்ட சுற்று வட்டாரக் கிராமத்தினரும் பயன்படுத்துகின்றனர்.விவசாய விளை பொருட்களும் இந்த ரோட்டில் பயணித்தே கொண்டு செல்கின்றனர்.இந்த ரோட்டை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும்.