கூலித்தொகை தகராறில் பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை

நாமக்கல், ஜன. 16-

கூலித்தொகை கேட்ட தகராறில், பெட்ரோல் ஊற்றி பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி, கூடகோவிலுாரை சேர்ந்தவர் பூமாரி, 30; இவருக்கும், மதுரை பெரிய உலகாணியை சேர்ந்த மணிகண்டனுக்கும் திருமணம் நடந்தது. கணவருடன் கருத்து வேறுபாடால் பூமாரி பிரிந்துவிட்டார். இதையடுத்து விவாகரத்து பெற்று, உறவினரான மகாலிங்கம், 49, என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையே, மகாலிங்கத்திற்கு, தர்மபுரியை சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் மாரியப்பன் பழக்கமானார். அவரிடம் கடந்த, 8 மாதங்களாக மகாலிங்கமும், பூமாரியும் கட்டட வேலை செய்து வந்தனர். கடந்த, 10 நாட்களாக, நாமக்கல் பூங்கா நகரில் வாடகை வீட்டில் தங்கி, கட்டட வேலை செய்து வந்தனர்.

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என, மாரியப்பன் மற்றும் அவரது மகன் சேட்டு ஆகியோரிடம் கூலித்தொகை பாக்கி, 45,000 ரூபாயை பூமாரி கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள், 'கணக்கு பார்த்து தான் தருவோம்' என, இழுத்தடித்துள்ளனர். இந்நிலையில், ஜன., 9 இரவு, ஒப்பந்ததாரர் மாரியப்பன், 'கூலி பணத்தில், 18,000 ரூபாய் வாங்கி உள்ளீர்கள். மீதமுள்ள பணத்தை, 12ம் தேதி தருகிறேன்' என, தெரிவித்துள்ளார். அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சேட்டு, பூமாரியிடம் இருந்து, 18,000 ரூபாயை திரும்ப பெற்றுக்கொண்டு, 'உனக்கு பணம் கொடுக்க முடியாது' எனக்கூறி, வீட்டில் கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து பூமாரி மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.

அப்போது, பூமாரி விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்ததால், அவர் மீது தீப்பற்றியது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு பூமாரி உயிரிழந்தார். நாமக்கல் போலீசார், கட்டட ஒப்பந்ததாரர் மாரியப்பன், அவரது மகன் சேட்டு ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement