ஆற்றுத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
கடலுார் : கடலுார் தென்பெண்ணையாற்றில், வரும் 18ம் தேதி நடக்க உள்ள ஆற்றுத்திருவிழாவை முன்னிட்டு, சுத்தம் செய்யும் பணி நடந்தது.
தென்பெண்ணையாற்றின் கரையோர பகுதிகளில் உள்ள கடலுார், பண்ருட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுார், விழுப்புரம் மாவட்டம் பூவரசங்குப்பம், புதுச்சேரி பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் பகுதிகளில் தை 5ம் தேதியன்று ஆற்றுத்திருவிழா நடப்பது வழக்கம்.
கெடிலம் மற்றும் கோமுகி ஆற்று பகுதிகளிலும் ஆற்றுத்திருவிழா கொண்டாடப்படும். விழாவில் பல்வேறு பகுதியிலுள்ள கோவில் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு ஆற்று திருவிழாவில் எழுந்தருள செய்யப்பட்டு தீர்த்தவாரி நடக்கும். சுற்றுப்புற கிராம மக்கள் விழாவை காண ஏராளமானோர் கூடுவர்.
அந்த வகையில் வரும் 18 ம் தேதி ஆற்றுத்திருவிழா நடக்க உள்ள நிலையில், கடலுார் தென்பெண்ணையாற்றில் பாடலீஸ்வரர், வண்டிப்பாளையம் சுப்ரமணியர், மஞ்சக்குப்பம் முத்துமாரியம்மன், ஆனைக்குப்பம் நாகவள்ளியம்மன், தாழங்குடா, நாணமேடு மாரியம்மன் உட்பட சுற்றுப்பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து சுவாமிகள் எழுந்தருள செய்யப்பட்டு தீர்த்தவாரி நடக்கிறது.
அதையொட்டி, கடலுார் ஆல்பேட்டை தென்பெண்ணாயாற்றின் ஆற்றுத்திருவிழா ஏற்பாடுகள் நேற்று மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது. ஆற்றின் கரைகளில் உள்ள செடி,கொடிகள், முட்புதர்கள் நேற்று பொக்லைன் மூலமாக அகற்றும் பணி நடந்தது.
திருவிழாவிற்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக குடிநீர், தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.