பட்டி பெருகணும்; பால் பொங்கி வழியணும் புறநகரில் மாட்டு பொங்கல் கோலாகலம்

கோவை புறநகரில் மாட்டுப் பொங்கலை விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி கொண்டாடினர்.

சூலுார்



உழவு தொழிலுக்கு உற்ற துணையாகவும், உணவு உற்பத்திக்கு ஆதாரமாகவும் இருக்கும் சூரியனுக்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்தும் விழாவாக பொங்கல் கொண்டாடப் படுகிறது.

அதேபோல், அந்த சூரியனுக்கு இணையாக விவசாயிக்கும், விவசாயத்துக்கும் உறுதுணையாக இருப்பவை கால்நடைகள். செல்வத்தை தரும் அந்த செல்வங்களுக்கு பட்டி பொங்கல் வைத்து வழிபட்டு நன்றி சொல்வது தான் மாட்டுப்பொங்கல்.

சூலுார் வட்டாரத்தில், மாட்டுப்பொங்கல் உற்சாகமாக பாரம்பரிய முறைப்படி நேற்று கொண்டாடப்பட்டது. மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து, மாட்டு கொட்டகைக்கு முன் பொங்கல் வைத்து , மாடுகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். அதன்பின் பொங்கலை மாடுகளுக்கு கொடுத்து வணங்கினர். செலக்கரச்சலில் உள்ள மால கோவிலில் கோமாதா பூஜைகள் நடந்தன.

மேட்டுப்பாளையம்



மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழாக்கள் நடைபெற்றன.

மேட்டுப்பாளையம் நகராட்சி வ.உ.சி., வீதியில், அப்பகுதி மக்கள், பத்தாவது ஆண்டாக சமத்துவ பொங்கல் விழாவை இரண்டு நாட்கள் கொண்டாடினர். விழாவுக்கு கவுன்சிலர் உமா மகேஸ்வரி மூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் சிவமூர்த்தி வரவேற்றார். முதல் நாள் விநாயகர் வழிபாடுடன் பொங்கல் வைத்தனர். பின்பு சிறுவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

இரண்டாம் நாளில் பெண்களுக்கு கோலப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகளும், ஆண்களுக்கு உறி அடித்தல், கயிறு இழுத்தல் உள்பட பல்வேறு போட்டிகளும் நடந்தன. சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை தலைவர் பாலமுருகன், வக்கீல் அஷ்ரப் அலி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். துணை ஒருங்கிணைப்பாளர்கள், நடன பயிற்சியாளர்கள், நேஷனல் பள்ளி நிர்வாகத்தினர், நகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, அன்பு ஆம்புலன்ஸ் நிறுவனர் அப்துல் ரசாக் பரிசுகளை வழங்கினார்.

மேட்டுப்பாளையம் அடுத்த குறிஞ்சி நகரில் ஆறாவது ஆண்டாக பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவை, ஜடையம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

இரண்டாம் நாள் கோல போட்டியும், குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும், மாட்டுப் பொங்கல் வைத்தலும், இளம் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.

மேட்டுப்பாளையம் அடுத்த குத்தாரிபாளையத்தில் வேலுசாமி மற்றும் டாக்டர் குருசாமி தோட்டத்தில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக நடைபெற்றது. மாடுகளை குளிப்பாட்டி சந்தனம், சிகப்பு பொட்டு வைத்தனர். வீட்டு வாசலில் பொங்கல் வைத்து, சாணத்தில் பாத்தி கட்டி, அதற்கும் பூஜை செய்தனர்.

பின்பு மாடுகளுக்கும் பூஜை செய்து, பொங்கல் மற்றும் வாழைப்பழங்களை பத்மாவதி வேலுசாமி, மற்றும் சிறுவர், சிறுமியர் கொடுத்து மகிழ்ந்தனர். பின்னர் பாத்தியை மாடு மற்றும் கன்றுக்குட்டியை தாண்ட வைத்தனர்.

அன்னுார்



அன்னுார், 6வது வார்டு, உப்பு தோட்டம் பகுதியில், நேற்று கோலப் போட்டி நடந்தது. 180 பெண்கள் இதில் பங்கேற்றனர். ஓவியப் போட்டியில் 82 சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர். இதையடுத்து விளையாட்டு போட்டிகள் நடந்தன. கிரிக்கெட் போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் அன்னுார் அணியை, அய்யப்ப ரெட்டி புதூர் அணி வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் பரிசு வழங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் ரமேஷ், நிர்வாகிகள் சுகுமார், நாகராஜ், மனோஜ், ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அன்னுார் சேவா சங்க மண்டபத்தில் தாசபளஞ்சிக சேவா சங்கம், மாதர் சங்கம் மற்றும் இளைஞர் சங்கம் சார்பில் பொது பொங்கல் வைக்கப்பட்டது. கும்மியடித்து பாடல் பாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு சங்கத் தலைவர் பரமேஸ்வரன் பரிசு வழங்கினார்.

அன்னுார் ஏ.எம்.காலனியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோலப் போட்டி நடந்தது. 20 பெண்கள் போட்டியில் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

கெம்பநாயக்கன்பாளையத்தில் பொது பொங்கல் வைக்கப்பட்டது. சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் என அனைவருக்கும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

சொக்கம்பாளையத்தில் செல்வ விநாயகர் கோவிலில் பொது பொங்கல் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. தேசிய சேவா சங்கத் தலைவர் திருவேங்கடம், பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெ.நா.பாளையம்



நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமசாமி நகரில் பொங்கல் விளையாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியையொட்டி பாட்டு போட்டி, குழந்தைகள் நடனம், பலுான் ஊதி வெடித்தல், வினாடி வினா, முறுக்கு கடித்தல், சாக்லேட் எடுத்தல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், சாக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஊசியில் நூல் கோர்த்தல், ஸ்லோ சைக்கிள் போட்டிகள் நடந்தன. 10 மற்றும் பிளஸ், 2 வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது.

பெரியநாயக்கன்பாளையம் தேசிய மனித வள மேம்பாட்டு மையத்தில் பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி நடந்தது. நிகழ்ச்சியில்,பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

நாட்டுப்புற பாடல்களுக்கு நடனம் ஆடும் நிகழ்ச்சி நடந்தது. போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் ரோட்டரி சமுதாய உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மையத்தின் இயக்குனர் சகாதேவன் செய்து இருந்தார்.

இடிகரை மவுண்டன் வியூ குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது.

இதில் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-நிருபர் குழு-

Advertisement