வழிகாட்டி திருவள்ளுவர்: கவர்னர் ரவி பெருமிதம்

சென்னை: 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தையொட்டி, கவர்னர் மாளிகையில் நேற்று காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்திற்கு, கவர்னர் ரவி மலர் துாவி மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் தினத்தையொட்டி கவர்னர் வெளியிட்ட அறிக்கை:

பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை, தேசம் ஆழ்ந்த நன்றியுடனும், மிகுந்த பய பக்தியுடனும் நினைவுகூர்கிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், அவர் ஒவ்வொரு தனி நபருக்கும், அமைப்புக்கும் பொருந்தக்கூடிய, ஒப்பற்ற வழிகாட்டியான திருக்குறளை வழங்கினார்.

பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும், நம் தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில், நன்னடத்தையின் ஆழத்தையும் அவர் நமக்கு கற்றுக் கொடுத்தார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும், ஆட்சியாளர்களுக்கும், ஒரு விரிவான நல்லொழுக்க குறியீட்டை அவர் வகுத்தார்.

திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் அதே வேளையில், அவர் நம் அன்றாட வழிகாட்டியாக விளங்கி வருகிறார். எனவே, அவர் தினமும் நினைவுகூரப்பட்டு, கொண்டாடப்பட வேண்டும்.

திருவள்ளுவரின் சிறந்த பக்தரான பிரதமர் நரேந்திர மோடிக்கு என் நன்றி. திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement