பொங்கல் பண்டிகை விடுமுறை வெறிச்சோடிய காய்கறி சந்தை
உடுமலை : உடுமலை நகராட்சி மொத்த காய்கறி சந்தைக்கு, சுற்றுப்புற பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்து, கமிஷன் கடைகள் வாயிலாக, ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்திலிருந்து வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து வருவதால், காய்கறிகள், விவசாயிகள், வியாபாரிகள் என பரபரப்பாக காணப்படும்.
உழவர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு, உடுமலை மொத்த காய்கறி சந்தைக்கு, நேற்றும், இன்றும், இரு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, சந்தையில் விளை பொருட்கள் ஏலம் நடக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ,எந்நேரமும் பரபரப்பாக காணப்படும், மொத்த காய்கறி சந்தை, வெறிச்சோடி காணப்பட்டது.
இருப்பினும், நேற்று மாட்டுப்பொங்கல் தினம் என்பதால், ராஜேந்திரா ரோட்டில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இந்த ரோட்டில், கரும்பு, மஞ்சள் கொத்து, பொங்கல் பானை, கோலப்பொடிகள் என பொங்கல் பொருட்கள் விற்பனை கடைகளில் விற்பனை அமோகமாக நடந்து வந்தது. இதனால், நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.