முற்றுகை போராட்ட அறிவிப்பு: சீமான் வீட்டிற்கு பாதுகாப்பு

சென்னை ; ஈ.வெ.ராமசாமி ஆதரவு அமைப்பினர், சீமான் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்து இருப்பதால், அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில தினங்களாக ஈ.வெ.ராமசாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவருக்கு, தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; பா.ஜ., தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஆண், பெண் உறவு குறித்து ஈ.வெ.ராமசாமி கொச்சையாக எழுதி இருப்பதாக சீமான் கூறியதற்கு ஆதாரம் கேட்டு, கடந்த 16ம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டை, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, சீமான் வீட்டை நோக்கி சென்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சசிகுமார் கார் கண்ணாடியை கல்லால் வீசி தாக்கினர்.

இது தொடர்பாக, மூன்று பெண்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், சீமானுக்கு எதிராக மாநிலம் முழுதும் போராட்டம் நடத்த, ஈ.வெ.ராமசாமி ஆதரவு அமைப்பினர், ஆட்களை திரட்டி வருகின்றனர். இதற்காக, சமூக வலைதளம் வாயிலாக ஒருங்கிணைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

மிகப்பெரிய அளவில் ஆட்களை வரவழைத்து, வரும் 22ம் தேதி சீமான் வீட்டை முற்றுகையிட இருப்பதாக அறிவித்து உள்ளனர். இதனால், சீமான் வீட்டிற்கு சுழற்சி அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement