ஏழு எருமை ஓடையில் பொங்கும் நுரை; மழைநீருடன் கலந்த கழிவுநீர்

மேட்டுப்பாளையம் : காரமடை அருகே காளட்டியூர் பகுதியில் ஏழு எருமை பள்ளத்திற்கு செல்லும் ஓடையில், மழை நீருடன் கழிவு நீர் கலந்து நுரை பொங்கி செல்கிறது.

பவானி ஆற்றுக்கு நீர்வரத்து வரும் ஓடைகளில் மிகவும் முக்கிய ஓடையாக, மேற்கு தொடர்ச்சி மலை அருகே கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் உருவாகும் ஒடை, பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி வழியாக சென்று, மத்தம்பாளையம் குட்டை மற்றும் காரமடை அடுத்த சிக்காரம்பாளையம், காளட்டியூர், பெள்ளாதி, பெள்ளேபாளையம், இலுப்பந்தம் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக சிறுமுகை அருகே பகத்தூரில் ஏழு எருமை பள்ளம் சென்று பவானி ஆற்றில் கலக்கிறது. அந்த நீர் பவானிசாகர் அணைக்கும் சென்றடைகிறது.

இவ்வுளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஓடையில் மழை பெய்யும் போது மட்டுமே தண்ணீர் ஓரளவு மாசு இல்லாமல் செல்கிறது. பிற நாட்களில் தொழில்நிறுவனங்களின் கழிவு நீர் , ஓடை அருகே உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் வீட்டு கழிவுநீர் தான் செல்கிறது.

இதனிடையே கடந்த சில நாட்களாக காரமடை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஓடையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் கழிவுநீர், கலப்பதால் தற்போது தண்ணீர் கருப்பு நிறத்திலும், நுரை பொங்கியும் செல்கிறது. காளட்டியூர் அருகே ஓடை நீர் முழுவதும் நுரை பொங்கி காணப்படுகிறது. முற்றிலும் மாசடைந்த ஓடை நீர், பவானி ஆற்றில் கலப்பதால் மாசுடைந்து விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது. அதே போல் சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்கள், விளைநிலங்கள் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஏழு எருமை பள்ளத்திற்கு வரும் ஓடை நீர் முற்றிலும் மாசடைந்து வருகிறது. இதற்கு காரணம் உள்ளாட்சி அமைப்புகளின் கழிவு நீர், அதனை சுற்றியுள்ள தொழில்நிறுவனங்களின் கழிவு நீர் ஓடையில் சுத்திகரிப்பு செய்யப்படாமல் நேரடியாக விடுவது தான்.

மழை காலத்தை பயன்படுத்தி கழிவு நீர் அதிகளவில் ஓடையில் கலக்கப்படுகின்றன. இதனால் பவானி ஆறு, ஏழு எருமை பள்ளம் சுற்றியுள்ள கிணற்று நீர்களும் கூட மாசடையும் நிலை உள்ளது.

பவானி ஆற்றுக்கு மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படும் கால்நடைகள் மாசடைந்த நீரை குடிப்பதால், அவற்றுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

கழிவு நீரை சுத்திகிரிப்பு செய்து விடவில்லை என்றால், எதிர்காலத்தில் பவானி ஆறு முழுவதும் மாசடைந்து சாக்கடையாக மாறிவிடும். கால்நடைகள் வளர்ப்பு, விவசாயம் குறைந்து விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஓடையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. கோவை மாவட்டநிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும், என்றனர்.------

Advertisement