தவறான சிகிச்சையால் வாலிபர் பலி; மறியல்
செம்பட்டி: செம்பட்டி தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழந்ததால் உறவினர்கள் மறியல் செய்தனர் .
செம்பட்டி அருகே கூலம்பட்டியை சேர்ந்தவர் முனிசாமி 41. உடற்கல்வி ஆசிரியருக்கு படித்த இவர் விவசாய கூலி வேலை செய்துவந்தார். திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
நெஞ்சுவலி ஏற்பட அக்கம் பக்கத்தினர் செம்பட்டியில் ரவுண்டானா அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர் இல்லாத சூழலில் செவிலியர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். சற்று நேரத்தில் அவர் இறந்தார்.
ஆவேசமடைந்த உறவினர்கள் தவறான சிகிச்சையால் முனிசாமி இறந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சுற்று கிராமத்தினர் திரண்டனர். மருத்துவமனை நிர்வாக அலட்சியத்தை கண்டித்து அங்கே மறியலில் ஈடுபட்டனர். எஸ்.ஐ., ராமபாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார். சமரசம் ஏற்படாததால் மாலை 4 :00 மணி முதல் இரவு 8 :00 மணி வரை மறியல் தொடர்ந்தது.
திண்டுக்கல் -குமுளி , செம்பட்டி- பழநி வழித்தடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வெளியூர் பயணிகள் மட்டுமின்றி பழநி பாதயாத்திரை பக்தர்களும் அவதிக்குள்ளாகினர்.