மாட்டு பொங்கலில் எருதுவிடும் விழா
கிருஷ்ணகிரி: மாட்டு பொங்கலையொட்டி நேற்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எருது விடும் திருவிழா நடந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜகடை சாலையில் நேற்று, எருது விடும் திருவிழா நடந்தது. மாலை, 4:30 மணிக்கு, மாடுகளை ஊர்வலமாக கொண்டு சென்று பின்னர் சாலையில் ஓட விட்டனர்.
எருது விடுவதை பார்க்க, ஏராளமானோர் சாலையின் இருபுறங்களிலும் நின்றிருந்தனர். ஆனால், பாதுகாப்பிற்காக தடுப்புகள் எதுவும் அமைக்காததால், மாடுகள் பல இடங்களில் கூட்டத்திற்குள் புகுந்து பார்வையாளர்களை கீழே தள்ளியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மிகவும் அச்சத்திற்கு ஆளாகினர். இதே போல், பழையபேட்டை மேல்தெருவில், சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைத்து, 50க்கும் மேற்பட்ட மாடுகளை ஓட விட்டனர். மாடுகளை பார்க்க வந்த இளைஞர்கள் சாலையின் நடுவில் நின்றதால், சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி அடுத்த சின்னேப்பள்ளி, கிட்டம்பட்டி மற்றும் சிந்தகம்பள்ளி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று எருது விடும் திருவிழா நடந்தது. இதில், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் எருதுகளை கொண்டு வந்திருந்தனர். எருது விடும் விழாவைக்காண ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.