பட்டம் தேவையில்லை; வேலை தெரிந்தால் போதும்: அசத்தல் சம்பளத்தில் வேலைக்கு அழைக்கிறார் எலான் மஸ்க்!
புதுடில்லி: சாப்ட்வேர் இன்ஜினியரிங் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. பள்ளி படிப்பு, பட்டம் உள்ளிட்டவை தேவையில்லை என எக்ஸ் சமூக வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர். சமூக வலைத்தள நிறுவனமான எக்ஸ் தளத்தையும் நடத்தி வருகிறார். 'டிக்டாக்' செயலியை எலான் மஸ்க் வாங்க இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சூழலில் வேலைக்கு ஆட்கள் பணியமர்த்தப் போகிறேன் என்று அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.
அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: நீங்கள் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து, பல்வேறு விதமான செயலிகளை உருவாக்க விரும்பினால், உங்களின் விவரங்களை, code@x.comக்கு அனுப்புங்கள்.
எங்களது நிறுவனத்தில் இணைந்து விடுங்கள். நீங்கள் பள்ளிக்குச் சென்றீர்களா? நீங்கள் எந்த பெரிய பெயர் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிந்தீர்களா, பட்டம் படித்தீர்களா என்பது எங்களுக்கு கவலை இல்லை. உங்களது திறமையை காட்டுங்கள். இவ்வாறு எலான் மஸ்க் கூறியுள்ளார்.
திறமைசாலிகளுக்கு கை நிறைய சம்பளம் அள்ளித் தருவதில் எலான் மஸ்க் தாராளமாக நடந்து கொள்வார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். மஸ்கின் இந்த அறிவிப்பு, அவர் டிக் டாக் சமூக வலைதளத்தை வாங்கி விட்டாரா என்ற சந்தேகத்தை கிளப்புகிறது என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.