மைலாப்பூர் பொங்கல் திருவிழா
சென்னையைப் பொறுத்தவரை பொங்கல் திருவிழாவிற்கு கட்டியம் கூறுவது மைலாப்பூர் திருவிழாதான்.
விருந்தினர்களை பராம்பரிய கட்டிடங்களை பார்வையிட அழைத்துச் செல்வது,அவர்களை பழமையான கோவில்களுக்கு அழைத்துச் சென்று தரிசனம் பெறவைப்பது,நமது கலாச்சார உணவுகளை குறைந்த விலைக்கு வழங்குவது என்று மூன்று நாள் அமர்க்களமாக திருவிழாவினை நடத்துவர்.
மேலும் கோவில் முன் மேடை அமைத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவர், அதிலும் பள்ளிக் குழந்தைகளின் பங்கு அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்வர், அவர்கள்தானே வருங்கால செல்வங்கள் நாட்டின் சொத்து ஆகவே அவர்களை பெருமைப்படுத்துவர்.
இதில் ஹைலைட்டான விஷயம் கோலப்போட்டிதான்.நகரில் அடுக்குமாடி கலாச்சாரம் வளர்ந்துவிட்ட சூழ்நிலையில் வீட்டு வாசலில் கோலத்தைக் காண்பதே அபூர்வமாகப் போய்விட்டது, அந்தக்கலையை காப்பாற்றும் விதத்தில் மைலாப்பூர் வடக்கு வீதி முழுவதையும் இரண்டு நாட்களுக்கு கோலமிட ஒதுக்கிதந்து விடுகின்றனர்.
இதில் வண்ணம் மற்றும் வெள்ளைப் புள்ளி கோலம் வரைந்து தங்கள் திறமையைக் காட்டலாம்,இந்தப் போட்டியில் ஆண் பெண் பெரியவர் சிறியவர் என்று யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
இரண்டு நாட்களிலும் ஏாராளமான பேர் கலந்து கொண்டு விதம்விதமாக கோலம் வரைந்து பார்வையாளர்களை வியக்கவைத்தனர்,சிறந்த கோலங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
-எல்.முருகராஜ்