இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்தம்; காசா மக்கள் கொண்டாட்டம்: இந்தியா வரவேற்பு
புதுடில்லி: இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலுக்குள் புகுந்து, 2023ம் ஆண்டு, அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் இறந்தனர். நுாற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து, துவங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர், 15 மாதங்களாக நீடித்து வந்தது. காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரை நிறுத்த ஹமாஸ் - இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் காசாவில் பரிதவித்து வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் இன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது; பிணை கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் காசாவில் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
இது காசா மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் மனிதாபிமான உதவிக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து பிணை கைதிகளையும் விடுவிக்கவும், போர்நிறுத்தம் வேண்டுமென்றும், நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.