திருக்கடையூரில் மாடு, குதிரை வண்டிகளுக்கான ரேக்ளா பந்தயம்

திருக்கடையூரில் காணும் பொங்கல் பண்டிகையையொட்டி மாடு, குதிரை வண்டிகளுக்கான ரேக்ளா பந்தயம் இன்று நடந்தது .

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டு தோறும் காணும் பொங்கல் நாளன்று திருக்கடையூர், தில்லையாடி, டி.மணல்மேடு, பிள்ளைப்பெருமாள் நல்லூர், மாணிக்கப்பங்கு, காழியப்பநல்லூர், கிள்ளியூர் ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் மாடு, குதிரை வண்டிகளுக்கான ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு காணும் பொங்கல் தினமான இன்று திருக்கடையூரில் உள்ள, தியாகி வள்ளியம்மை நுழைவு வாயில் அருகே நடந்த ரேக்ளா பந்தய தொடக்க நிகழ்ச்சிக்கு, திருக்கடையூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயமாலதி தலைமை வகித்தார். பூம்புகார் தொகுதி எம்எல்ஏ. நிவேதா எம்.முருகன் போட்டிகளை தொடங்கி வைத்தார். திருக்கடையூர்- தரங்கம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ தொலைவுக்கு காலை தொடங்கி மாலை வரை போட்டிகள் நடந்தன.

சிறிய மாடு, நடு மாடு, பெரிய மாடு, கரிச்சான் குதிரை, நடு குதிரை, பெரிய குதிரை என பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மயிலாடுதுறை மட்டுமன்றி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று பந்தயத்தை பார்த்து ரசித்தனர். மாலை நடந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்று ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாக்குழு நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement