நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்தியது இவனா ? போலீசார் வெளியிட்டுள்ள புகைப்படம்
புனே : பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மீதான கத்தி குத்து தாக்குதலில் குற்றவாளியை கைது செய்ய போலீசார் திணறி வரும் நிலையில், சம்பவத்தன்று சிசிடிவி கேமிராவில் சிக்கிய இளைஞரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், 54, மஹாராஷ்டிராவின் மும்பை பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில், நான்கு தளங்களுடன் இவரது வீடு உள்ளது. மனைவியும், நடிகையுமான கரீனா கபூர், மகன்கள் தைமூர் மற்றும் ஜேஹ் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டுக்குள் சில தினங்களுக்கு முன் புகுந்த மர்ம நபர், சயீப் அலிகானை ஆறு முறை கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.
இதில், அவரது முதுகுத்தண்டுக்கு மிக அருகே, 6 செ.மீ., ஆழத்துக்கு கத்தி பாய்ந்து சிக்கிக் கொண்டது; கழுத்திலும் ஆழமான காயம் ஏற்பட்டது.தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கத்தியால் குத்தியவன் ஆறாவது மாடியிலிருந்து இறங்கி வெளியேறும் சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது.
இதனை வைத்து குற்றவாளியை பிடிக்க பந்தரா போலீசார் 30 பேர் கொண்ட தனிப்படை அமைத்து வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆறாவது மாடியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் அவனது முகத்தை போன்று பந்தரா ரயில் நிலையத்தில் ஒருவரின் புகைப்படத்தை போலீசார் இன்று வெளியிட்டுள்ளனர். அந்த இளைஞன் புளூ சர்ட் அணிந்திருந்தான். சயீப் அலிகானின் வீட்டு 6-வது மாடியில் பதிவான அவனது முகத்துடன் ஒத்துபோகும் வகையில் அந்த நபர் உள்ளதால் அந்த புகைபடத்தை வெளியிட்டு போலீசார் தேடி வருகின்றனர்.
முன்னதாக கத்தி குத்து சம்பவத்தில் சில கிரிமினல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இதன் பின்னணியில் திருட்டு மட்டுமே நோக்கமாக இருந்துள்ளது. என, மாநில உள்துறை இணைஅமைச்சர் யோகேஷ் கடம் தெரிவித்துள்ளார்.