கோல்கட்டா பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு ?
கோல்கட்டா: நாட்டை பரபரப்புக்குள்ளாக்கிய கோல்கட்டா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயது பெண் பயிற்சி டாக்டர் கடந்தாண்டு ஆக். 9ம் தேதி அங்குள்ள கருத்தரங்கக் கூடத்தில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், அங்கு பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டான்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், மருத்துவக் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், பெண் டாக்டர் உடல் கண்டெடுக்கப்பட்ட மருத்துவமனையிலும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இச்சம்வத்தை கண்டித்து பயிற்சி டாக்டர்களின் தொடர் போராட்டங்களால் மேற்கு வங்கத்தில் பல அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
162 நாட்களில் தீர்ப்பு
இந்தவழக்கு கோல்கட்டாவில் செல்டாக் கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தினமும் என 162 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு 120 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று மதியம் 2:30 மணியளவில் நீதிபதி அனீர்பான் தாஸ் தீர்ப்பை வெளியிடுகிறார்.