மீண்டது பாக்., அணி * ஷகீல், ரிஸ்வான் அரைசதம்
முல்தான்: முல்தான் டெஸ்ட் துவக்கத்தில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டது பாகிஸ்தான் அணி.
பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நேற்று முல்தானில் துவங்கியது. கடுமையான பனிமூட்டம் காரணமாக போட்டி நான்கு மணி நேரம் தாமதமாகத் துவங்கியது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
சரிந்த 'டாப்'
பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ஷான் மசூது (11), ஹுரெய்ரா (6) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. கம்ரான் குலாம் 5 ரன்னுக்கு வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசம் 8 ரன்னில் அவுட்டானார். பாகிஸ்தான் அணி 46 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
பின் சாத் ஷகீல், முகமது ரிஸ்வான் ஜோடி இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரைசதம் கடந்தனர். போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்னதாக முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 143/4 ரன் எடுத்திருந்தது. நான்காவது விக்கெட்டுக்கு 97 ரன் சேர்த்த ஷகீல் (56), ரிஸ்வான் (51) அவுட்டாகாமல் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜேடன் சீலஸ் 3, குடகேஷ் 1 விக்கெட் கைப்பற்றினர்.