சாதிக்குமா இளம் இந்தியா * பெண்கள் 'ஜூனியர்' உலக கோப்பை துவக்கம்

கோலாலம்பூர்: பெண்களுக்கான ஜூனியர் 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று மலேசியாவில் துவங்குகிறது. நடப்பு சாம்பியன் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு மீண்டும் கோப்பை வெல்லக் காத்திருக்கிறது.
மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான 'டி-20' உலக கோப்பை தொடரின் இரண்டாவது சீசன், இன்று துவங்குகிறது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. இவை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடம் பெறும் அணிகள் 'சூப்பர்-6' சுற்றுக்கு முன்னேறும். இதில் 12 அணிகள் தலா 6 என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன் முடிவில் இரண்டு 'சூப்பர்-6' பிரிவிலும் 'டாப்-2' இடம் பெறும் அணிகள், ஜன. 31ல் நடக்கவுள்ள அரையிறுதிக்கு முன்னேறும். பிப். 2ல் கோலாலம்பூரில் பைனல் நடக்கும்.
இந்தியா எப்படி
இந்திய அணி, 'ஏ' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், மலேசியா, இலங்கை அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. தனது முதல் போட்டியில் நாளை வலிமையான வெஸ்ட் இண்டீசை சந்திக்கிறது. அடுத்து மலேசியா (ஜன. 21), இலங்கை (ஜன. 23) அணிகளுடன் மோதும். இந்திய அணிக்கு நிக்கி பிரசாத் தலைமை ஏற்றுள்ளார்.
தவிர சனிகா, திரிஷா, மதுரையை சேர்ந்த கமலினி, ஜோஷிதா, பாருனிகா, வைஷ்ணவி உள்ளிட்டோர் கைகொடுக்க உள்ளனர். சமீபத்தில் நடந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி, ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. தவிர, சமீபத்தில் கோலாம்பூரில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய பெண்கள் அணி கோப்பை வென்றதும், இத்தொடரில் நம்பிக்கையுடன் செயல்பட உதவும்.
தவிர ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகளும் சவால் கொடுக்க காத்திருக்கின்றன.
சமோவா, நைஜீரியா, நேபாளம், மலேசிய அணிகள் முதன் முதலாக களம் காண்கின்றன. இன்று ஆஸ்திரேலியா-ஸ்காட்லாந்து மோதல் உட்பட 4 போட்டிகள் நடக்கின்றன.

17 ஆண்டுக்குப் பின்...
மலேசியாவில் கடந்த 2008ல் ஜூனியர் உலக கோப்பை (50 ஓவர்) தொடர் நடந்தது. கோலி தலைமையிலான இந்திய அணி இதில் கோப்பை வென்றது. தற்போது 17 ஆண்டுக்குப் பின் மீண்டும் மலேசியாவில் உலக கோப்பை (19 வயது, பெண்கள்) நடக்கிறது.

41 போட்டி
உலக கோப்பை தொடரில் 16 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றில் 24, 'சூப்பர்-6' சுற்றில் 12, 13-16வது இடத்துக்கான 2 மோதல், 2 அரையிறுதி, பைனல் என மொத்தம் 41 போட்டிகள், கோலாலம்பூர், சாராவாக், ஜோகர் என 3 மைதானத்தில் நடக்கவுள்ளன.

Advertisement