நான்காவது சுற்றில் ஜோகோவிச், சபலென்கா * ஆஸி., ஓபன் டென்னிசில் அபாரம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார் செர்பியாவின் ஜோகோவிச், பெலாரசின் சபலென்கா.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், மெல்போர்னில் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் உலகின் 'நம்பர்-7' வீரர், செர்பியாவின் ஜோகோவிச், செக் குடியரசின் தாமஸ் மச்சாக் ('நம்பர்-25') மோதினர்.
2 மணி நேரம், 22 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ஜோகோவிச் 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று, நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
அல்காரஸ் அசத்தல்
மற்றொரு போட்டியில் 'நம்பர்-3' வீரர், ஸ்பெயின் கார்லஸ் அல்காரஸ், போர்ச்சுகலின் போர்கசை எதிர்கொண்டார். முதல் இரு செட்டை அல்காரஸ் (6-2, 6-4) கைப்பற்றினார். மூன்றாவது செட்டை போர்கஸ் 7-6 என வசப்படுத்தினார்.
பின் சுதாரித்த அல்காரஸ் நான்காவது செட்டை 6-2 என வென்றார். 2 மணி நேரம், 57 நிமிடம் நீடித்த இப்போட்டியில் அல்காரஸ் 6-2, 6-4, 6-7, 6-2 என வெற்றி பெற்றார்.
மற்ற மூன்றாவது சுற்று போட்டிகளில் ஜெர்மனியின் ஜிவரேவ், செக் குடியரசின் லெஹக்கா, பிரான்சின் ஹம்பர்ட் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
சபலென்கா வெற்றி
பெண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றில், உலகின் 'நம்பர்-1' வீராங்கனை பெலாரசின் சபலென்கா, டென்மார்க்கின் டாசன் மோதினர். இதில் சபலென்கா 7-6, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், 6-4, 6-2 என கனடாவின் லேலாவை வீழ்த்தினார். ரஷ்யாவின் பவ்லி சென்கோவா, குரோஷியாவின் வெகிச், ஸ்பெயினின் படோசா உள்ளிட்டோர் மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்றனர்.

ஒசாகா விலகல்
பெண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றில் போட்டியில் ஜப்பானின் ஒசாகா, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் மோதினர். முதல் செட்டில் 5-2 என முன்னிலை பெற்றார் ஒசாகா. அடுத்து காயத்தால் அவதிப்பட, 6-7 என செட்டை இழந்தார். பின் போட்டியில் இருந்து விலக, பென்சிக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

போபண்ணா ஜோடி வெற்றி
கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, சீனாவின் ஷுவாய் ஜங் ஜோடி, பிரான்சின் மிலடினோவிச், குரோஷியாவின் இவான் டோடிச் ஜோடியை சந்தித்தது. ஒரு மணி நேரம், 12 நிமிடம் நடந்த போட்டியில் போபண்ணா ஜோடி, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது.

Advertisement