'கேல் ரத்னா' கவுரவம்...குகேஷ் பெருமிதம் * விருது வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
புதுடில்லி: ''கேல் ரத்னா விருது வென்றது 'ஸ்பெஷல்' தருணம். எனது கனவு நனவானது,'' என தமிழக செஸ் வீரர் குகேஷ் தெரிவித்தார்.
சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்தது.
விளையாட்டின் உயரிய மேஜர் தயான் சந்த் 'கேல் ரத்னா' விருது, இம்முறை நான்கு நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டது.
நான்கு நட்சத்திரம்
இளம் உலக செஸ் சாம்பியன் என சாதனை படைத்த தமிழகத்தின் குகேஷ் 18, பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணிக்கு வெண்கலம் பெற்றுத்தந்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரிஸ் பாராலிம்பிக், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற பிரவீன் குமார், சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்ற துப்பாக்கிசுடுதல் வீராங்கனை மனு பாகருக்கு 22, ஜனாதிபதி திரவுபதி முர்மு, 'கேல் ரத்னா' விருது வழங்கினார்.
32 பேருக்கு 'அர்ஜுனா'
ஜோதி (தடகளம்), சலிமா, ஜர்மன்பிரீத் சிங், சுக்ஜீத் சிங், சஞ்சய் (ஹாக்கி), நவ்தீப் சிங், சிம்ரன், ஹொகாடோ, தரம்பிர், பிரனவ் சூர்மா, சச்சின் கிலாரி, தீப்தி ஜீவன்ஜி, பிரீத்தி பால் (பாரா தடகளம்), நிதேஷ் குமார் (பாரா பாட்மின்டன்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), அமன் ஷெராவத் (மல்யுத்தம்), சாஜன் பிரகாஷ் (நீச்சல்), அபே சிங் (ஸ்குவாஷ்), சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசாலே (துப்பாக்கி சுடுதல்), ருபினா, மோனா (பாரா துப்பாக்கி சுடுதல்), கபில் பார்மர் (பாரா ஜூடோ), ராகேஷ் குமார் (பாரா வில்வித்தை), வந்திகா (செஸ்), நித்து காங்கஸ், சவீட்டி (குத்துச்சண்டை) உட்பட 32 பேர் அர்ஜுனா விருது பெற்றனர்.
சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது சுபாஷ் ராணா (பாரா துப்பாக்கி சுடுதல்), தீபாலி தேஷ்பாண்டே (துப்பாக்கி சுடுதல்), சந்தீப் சங்வானுக்கு (ஹாக்கி) வழங்கப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவ்யா, விளையாட்டுத்துறை செயலர் சுஜாதா சதுர்வேதி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
ஐந்து தமிழக நட்சத்திரங்கள்
தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் விருது பெற்றனர். குகேஷிற்கு 'கேல் ரத்னா', பாரா பாட்மின்டன் வீராங்கனைகள் துளசிமதி, மணிஷா, நித்ய ஸ்ரீ, ஸ்குவாஷ் வீரர் அபே சிங், 'அர்ஜுனா' விருது பெற்றனர்.
தேர்வு எப்படி...
இந்திய ஹாக்கி ஜாம்பவான், மேஜர் தயான்சந்த் பெயரில், விளையாட்டின் உயரிய 'கேல் ரத்னா' விருது வழங்கப்படுகிறது. சர்வதேச போட்டிகளில் சாதித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நான்கு ஆண்டு செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஒலிம்பிக், பாராலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு, உலக கோப்பையில் வென்ற பதக்கம் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும். தகுதியானவர்களை, விருதுக் குழுவினர் தேர்வு செய்வர். பாராட்டு சான்றிதழ், பதக்கம், ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும்.
* கடந்த நான்கு ஆண்டுகளில் தங்களது விளையாட்டில் சிறப்பாக செயல்பட்ட நட்சத்திரங்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. இதற்கு பாராட்டு சான்றிதழ், அர்ஜுனா சிலை, ரூ. 15 லட்சம் வழங்கப்பட்டன.
வாழ்நாள் 'அர்ஜுனா'
இந்தியாவின் முதல் பாராலிம்பிக் தங்க மகன் முரளிகாந்த் பேத்கர் 80. குத்துச்சண்டை வீரரான இவர், இந்திய ராணுவத்தில் இணைந்தார். 1965ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் ஏற்பட்ட குண்டு காயத்தால், இடுப்பு பகுதி பாதிக்கப்பட்டது.
பின் நீச்சலில் அசத்திய இவர், 1972, ஹெய்டில்பெர்க், பாராலிம்பிக்கில் (ஜெர்மனி) 50 மீ., பிரீஸ்டைல் போட்டியில் உலக சாதனையுடன் (37.33 வினாடி) தங்கம் வென்றார்.
நேற்று இவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான 'அர்ஜுனா' விருது வழங்கப்பட்டது. இரண்டு 'ஸ்டிக்' உதவியால் நடந்து வந்த இவரைப் பார்த்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, தனது மேடையை விட்டு இறங்கிச் சென்று விருது வழங்கினார்.
தவிர பிரணவ் சூர்மா, ராகேஷ் குமார் உள்ளிட்ட பாராலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு, கீழே இறங்கி வந்து விருது வழங்கினார்.
பெருமை
கேல் ரத்னா விருது பெற்ற மனுபாகர் கூறுகையில்,'' நிதானமாகவும், உறுதியாகவும் செயல்பட்டால் போட்டியில் வெல்லலாம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நமது தேசத்தின் மிகவும் பெருமைமிக்க விருது கேல் ரத்னா. இதை பெற உதவிய அனைவருக்கும் நன்றி,'' என்றார்.