இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கிடுக்கிப்பிடி * பத்து கட்டளை மீறினால் தடை

மும்பை: உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என்பது உட்பட 10 கட்டளைகளை இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., பிறப்பித்துள்ளது. இதை மீறுபவர்களுக்கு ஐ.பி.எல்., உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும்.

இந்திய அணியின் சமீபத்திய செயல்பாடுகள் ஏமாற்றம் அளித்தன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற தவறியது. இதற்கான காரணங்களை பயிற்சியாளர் காம்பிர், தேர்வுக்குழு தலைவர் அகார்கர் ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில், பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கான 10 விதிமுறைகள் (கட்டளை) வெளியிடப்பட்டுள்ளன. இதை பின்பற்ற தவறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூர் முதல் ஐ.பி.எல்., வரை பி.சி.சி.ஐ., நடத்தும் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும். உரிய காரணத்துடன் தேர்வுக்குழு தலைவர், தலைமை பயிற்சியாளரின் அனுமதி பெறுபவர்கள் விலக்கு பெறலாம்.


10 கட்டளை விபரம்.1. உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இதன் அடிப்படையில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
2. பயிற்சி, போட்டி நடக்கும் இடங்களுக்கு வீரர்கள் ஒன்றாக பஸ்சில் செல்ல வேண்டும். குடும்பத்தினருடன் தனியாக செல்லக்கூடாது.
3. குறிப்பிட்ட எடைக்கு அதிகமாக 'லக்கேஜ்' எடுத்து வரக் கூடாது. கூடுதல் எடை இருந்தால், அதற்கான செலவை சம்பந்தப்பட்ட வீரர் ஏற்க வேண்டும்.
4. வெளிநாட்டு தொடரின் போது தனிப்பட்ட முறையில் உதவியாளர், பாதுகாவலர், சமையல்காரரை வைத்துக் கொள்ள அனுமதி இல்லை.
5. பெங்களூருவில் உள்ள பயிற்சி அகாடமிக்கு வீரர்களின் 'லக்கேஜ்', தனிப்பட்ட உபகரணங்களை, அணி நிர்வாகத்துடன் ஒன்றிணைந்து அனுப்ப வேண்டும்.
6. பயிற்சியின் போது பாதியில் வெளியேறக் கூடாது. நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடியும் வரை இருக்க வேண்டும். பயிற்சிக்கு வரும் போதும் திரும்பும் போதும் வீரர்கள் ஒன்றாக செல்ல வேண்டும்.
7. கிரிக்கெட் தொடர் நடக்கும் போது தனிப்பட்ட முறையில் விளம்பர 'ஷூட்டிங்'கில் பங்கேற்கக் கூடாது.
8. வெளிநாட்டு தொடர் 45 நாளுக்கு மேல் இருந்தால், மனைவி, குழந்தைகள் (18 வயதுக்குட்பட்ட) 14 நாளுக்கு அனுமதிக்கப்படுவர்.
9. பி.சி.சி.ஐ., சார்பில் நடக்கும் விளம்பர 'ஷூட்டிங்'கில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
10. போட்டிகள் விரைவாக முடிந்தால், வீரர்கள் தனியாக தாயகம் திரும்பக் கூடாது. திட்டமிட்டபடி தொடர் முடியும் வரை இருக்க வேண்டும். ஒற்றுமையை உறுதி செய்ய, அனைவரும் ஒன்றாக நாடு திரும்ப வேண்டும்.

கோலிக்கு 'செக்'
இந்திய அணியில் 'சூப்பர் ஸ்டார்' கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர பயிற்சியாளர் காம்பிர் விரும்புகிறார். தற்போதைய விதிமுறைகள் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கோலி உள்ளிட்ட மூவருக்கு பாதிப்பை தரலாம். உள்ளூர் போட்டியில் கடைசியாக 2016ல் ரோகித், 2012ல் கோலி, 2018ல் பும்ரா விளையாடினர். இவர்கள் மீண்டும் ரஞ்சி உள்ளிட்ட தொடரில் பங்கேற்க வேண்டும்.
ஆஸ்திரேலிய தொடரின் போது கோலி, பும்ரா மட்டுமே தனியாக குடும்பத்தினருடன் சென்றனர். கோலிக்கு தனியாக பாதுகாவலர், சமையல்காரர் இருந்தனர். தற்போது, குடும்பத்தினருக்கு 14 நாள் மட்டும் அனுமதி என்பது சிரமம் தரலாம். இந்தியாவில் போட்டி விரைவாக முடிந்தால், கோலி, ரோகித் போன்றோர் உடனடியாக தங்களது வீட்டிற்கு திரும்புவர். இதற்கும் 'செக்' வைக்கப்பட்டுள்ளது.

காம்பிர் பணி என்ன
இந்திய அணியின் முன்னாள் 'சுழல்' நாயகன் ஹர்பஜன் சிங் கூறுகையில்,''விதிமுறையில் புதிய விஷயங்கள் எதுவும் இல்லை. மனைவி, குடும்பத்தினர் உடன் இருந்ததால், இந்தியா தோற்கவில்லை. வீரர்கள் சிறப்பாக பேட் செய்யாததால் தோற்றோம். எங்களது காலத்தில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு அனுமதி வேண்டும் என்றால் பி.சி.சி.ஐ.,க்கு ஒரு 'மெயில்' மட்டும் அனுப்புவோம். தற்போது தலைமை பயிற்சியாளர் காம்பிரின் அனுமதி பெற வேண்டும் என்கின்றனர். பயிற்சியாளர் என்பவர் களத்தில் இருந்து ஆட்ட நுணுக்கங்களை வீரர்களுக்கு கற்றுத் தர வேண்டும். நிர்வாக பணியில் தலையிடக் கூடாது. பயிற்சி தவிர மற்ற பொறுப்புகளை பி.சி.சி.ஐ., நிர்வாகிகளிடம் விட்டுவிட வேண்டும்,''என்றார்.

வருவாரா பும்ரா
பாகிஸ்தான், துபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் (பிப்.19-மார்ச் 9) நடக்க உள்ளது. இதற்கான இந்திய உத்தேச அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. கேப்டனாக ரோகித் சர்மா தொடர்வார். முதுகுப்பகுதி காயத்தால் அவதிப்படும் 'வேகப்புயல்' பும்ரா இடம் பெறுவது சந்தேகம். முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் இடம் பெறலாம். நல்ல 'பார்மில்' இருக்கும் ஜெய்ஸ்வால், விஜய் ஹசாரே தொடரில் 752 ரன் குவித்த கருண் நாயர் வாய்ப்பை எதிர்பார்க்கின்றனர். ரோகித், ராகுல், கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் இருப்பதால், பேட்டிங்கில் கடும் போட்டி காணப்படுகிறது. கீப்பராக ரிஷாப் பன்ட் நீடிப்பார். மாற்று கீப்பராக துருவ் ஜுரல் இடம் பெறலாம்.

Advertisement