காட்சிப்பொருளான பேட்டரி வாகனங்கள் குப்பை அகற்றும் பணிகள் தொய்வு

தொண்டி : குப்பை அள்ள பயன்படுத்தும் பேட்டரி வாகனங்கள் பழுதானதால் குப்பை சேகரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு கரும்பு சக்கை உள்ளிட்ட குப்பை அள்ள முடியாமல் துாய்மைப் பணியாளர்கள் தவிக்கின்றனர்.

தொண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இவற்றில் நிறைய சிறிய தெருக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு பல டன் குப்பை குவிகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு வாகனங்களில் சென்று சேகரிக்கபடுகிறது. சிறு தெருக்களில் சென்று குப்பை அள்ள சிரமமாக இருந்ததால் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் பேட்டரியில் இயங்கும் எட்டு வாகனம், ஒரு ஆண்டிற்கு முன்பு வாங்கப்பட்டது.

இதில் ஒரு வாகனத்தை தவிர மற்ற அனைத்தும் பழுதானது. இதனால் குப்பை சேகரிக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. டிராக்டர் மூலம் குப்பை அள்ளும் பணிகள் நடக்கிறது. இருந்த போதும் சிறிய தெருக்களுக்கு சென்று குப்பையை அள்ள முடியாததால் துாய்மைப் பணியாளர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

தொண்டி 5 வது வார்டு மக்கள் கூறியதாவது:

துாய்மைப் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நீண்ட துாரம் சென்று குப்பையை சேகரிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலரும் இல்லை. அங்குள்ள மற்ற பணியாளர்களும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

பொங்கலை முன்னிட்டு கரும்பு உள்ளிட்ட குப்பையை மூன்று நாட்களாகியும் அள்ளவில்லை. எனவே பழுதடைந்த குப்பை வண்டிகளை சரி செய்து தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement