தேசிய இளைஞர் விழாவில் பல்கலை., அணி பங்கேற்பு
புதுச்சேரி, : டில்லியில் மத்திய அரசு சார்பில், சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த தேசிய இளைஞர் விழாவில், புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றனர்.
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு 'தேசிய இளைஞர் விழா' டில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடந்தது.
இதில், புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவுறுத்தலின் பேரில், புதுச்சேரி மாநிலத்தின் 'விக்சித் பாரத்' மாணவர் அணியினர் பேராசிரியர் ரவிக்குமார் தலைமையில் பங்கேற்றனர்.
முன்னதாக, டில்லி அசோகா ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி, அந்தமான் மாணவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார். தொடர்ந்து இந்தியாவின் பொருளாதாரம், கல்வி, வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது, பேராசிரியர்கள் ரவிக்குமார், கல்பனா ஆகியோர் இணைந்து மொழி பெயர்த்த 'மிதக்கும் உலகம்' (ஜப்பானியக் கவிதைத் தொகுப்பு) என்ற நுாலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கினர்.