மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவக்கம்
மதுரை : மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்காகநிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் (சி.எம்.ஆர்.எல்.,) நிர்வாக இயக்குனர் சித்திக் தெரிவித்தார்.
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ரூ. 11 ஆயிரத்து 340 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 32 கி.மீ., துாரத்திற்கு 17 ஸ்டேஷன்களுடன் அமையவுள்ளது.
புதுார் தமிழ்நாடு ஓட்டல் அருகே துவங்கி வைகை ஆற்றின் கீழாக ஆண்டாள்புரம் வரை சுரங்கப் பாதையாகவும் மற்ற இடங்களில் பூமிக்கு மேலேயும் அமைகிறது.
அமெரிக்கன் கல்லுாரி, மீனாட்சி அம்மன் கோயில், ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் சுரங்கப்பாதை ஸ்டேஷன்கள் அமைகின்றன. இதில் ரயில்வே ஸ்டேஷனில் அமையவுள்ள மெட்ரோ ஸ்டேஷனை அதனுடன் ஒருங்கிணைத்து அமைப்பதற்கான ஆய்வுகளை சி.எம்.ஆர்.எல்., நிர்வாக இயக்குனர் சித்திக், திட்ட இயக்குனர் அர்ஜூனன், தெற்கு ரயில்வே துணைத் தலைமைப் பொறியாளர் ஞானசேகர் ஆகியோர் அடங்கிய குழு மேற்கொண்டது.
சித்திக் கூறியதாவது: மதுரை ரயில்வே ஸ்டேஷன் புதுப்பித்தல், மேம்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ஸ்டேஷனும் அமையவுள்ளதால் இவ்விரண்டையும் ஒருங்கிணைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. பயணிகள் ஒரு ஸ்டேஷனில் இருந்து மற்றொரு ஸ்டேஷனிற்கு விரைவாகவும் எளிதாகவும் செல்லும் வகையில் அமைக்க திட்டமிட்டு வருகிறோம்.
மெட்ரோ திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்த போது ரயில்வே ஸ்டேஷன் மறுசீரமைப்புக்கான வடிவமைப்பு இல்லை. தற்போது அப்பணிகள் நடந்து வரும் நிலையில் மெட்ரோ வடிவமைப்பை அவர்களுடன் ஆலோசித்து சிறிய மாற்றங்களுடன் ஒருங்கிணைத்து அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.
திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் ஓரிரு மாதங்களில் டெண்டர் விடப்படும். உயர்மட்ட பாதைக்கான பணிகள் 2 ஆண்டுகளிலும், சுரங்கப்பாதை பணிகள் மூன்றரை ஆண்டுகளிலும் நிறைவடையும். பணிகள் முழுமை பெற 4 ஆண்டுகள் வரை ஆகும். அதற்கு முன்பாக நிலம் கையகப்படுத்தும் பணிகளை தற்போதே துவங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
ராமேஸ்வரம், விருதுநகர் பாதை ரயில்வே தண்டவாளங்களில் அமையவுள்ள சுரங்கம், மேம்பாலத்திற்கான இடைவெளிகள் குறித்து திட்ட இயக்குனர் அர்ஜூனன் விவரித்தார். மதுரைக் கல்லுாரி வளைவு வழியாக அமையவுள்ள ஆண்டாள்புரம் மெட்ரோ ஸ்டேஷன் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.