வீட்டு வாசலில் எம்.ஜி.ஆர்., கோலம்

பாகூர் : புதுச்சேரி சட்டசபை முன்னாள் பாதுகாவலர், தனது வீட்டு வாசலில், எம்.ஜி.ஆர்., உருவத்தை, கோலமாக போட்டு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 108 வது பிறந்த நாளையொட்டி நேற்று பல்வேறு தரப்பினரும் அவரது சிலைக்கும், போட்டோவிற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ஆனால், எம்.ஜி.ஆர்., ரசிகர் ஒருவர், தனது வீட்டு வாசலில் எம்.ஜி.ஆர்., உருவத்தை கோலமாக போட்டு மரியாதை செலுத்தி உள்ளார். இவர், புதுச்சேரி சட்டசபையில் பாதுகாவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த ஜெயக்குமார், 65.

இவர், எம்.ஜி.ஆர்., பிறந்தநாளான நேற்று, அவர் மனைவி ராணி, மகள் ராஜஸ்ரீ, மருமகள் ஹரிணி ஆகியோருடன் சேர்ந்து, அதிகாலை 3:00 மணி முதல் 7:00 மணி வரை, 4 மணி நேரம் செலவிட்டு வீட்டு வாசலில், எம்.ஜி.ஆர்., உருவத்தை கோலமாக போட்டு அஞ்சலி செலுத்தினர்.

இது குறித்து ஜெயக்குமார் கூறுகையில் 'எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களுள் நானும் ஒருவன். அவரை நினைவு கூறும் வகையில் அவரது பிறந்த நாள், நினைவு நாளில் என் வீட்டு வாசலில், அவரது உருவத்தை கோலமாக போட்டும், விவசாயம், கல்வி, ஒழுக்கம் போன்ற நல்ல பண்புகள் தொடர்பான அவர் பேசிய வசனம் மற்றும் பாடல் வரிகளை எழுதி வைப்பேன்.

கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக செய்து வருகிறேன். இப்போது உள்ள தலைமுறையினருக்கு எம்.ஜி.ஆர்., குறித்து தெரிந்து கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்தும்' என்றார்.

Advertisement