பழனிசாமி, தி.மு.க.,வின் 'பி' டீம் அ.ம.மு.க., தினகரன் 'பகீர்' தகவல்

புதுச்சேரி : அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, தி.மு.க.,வின் 'பி' டீம்ஆக செயல்படுவதாக அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் குற்றம் சாட்டினார்.

புதுச்சேரியில் எம்.ஜி. ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதை பொருள் கலாசாரம் அதிகரித்துவிட்டதால், ஜெ., தொண்டர்கள் ஒன்றிணைந்து தி.மு.க., ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

தி.மு.க., என்றால் குடும்ப கட்சி என்ற நிலை மாறி, குடும்பம் தான் அரசு என மாறிவிட்டது. கலெக்டர் மட்டுமன்றி, மக்களையும் ஓரம்போ என கூறும், குடும்ப ஆட்சி ஆக்டோபஸ் போல கரங்களை நீட்டி சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.

அதன் வெளிப்பாடு தான் உதயநிதி உட்பட அனைத்து நிதிகளும், கலெக்டர் உட்பட மக்களை புறந்தள்ளினர். ஜல்லிக்கட்டு போட்டியில், முன் வரிசையில் அவரது குடும்பத்தினர் இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. வரும் 2026ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி முடிவுக்கு கொண்டு வருவோம்.

பண பலம், அதிகார துஷ்பிரயோகத்தை தேர்தல் ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் பா.ஜ., உட்பட அனைத்து கட்சிகளும் இடைத்தேர்தலில் புறக்கணித்துள்ளது.

வரும் 2026ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பழனிசாமி என்ற சுயநல மனிதருடைய ஆட்டம் ஓய்துவிடும். தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க., விற்கு அவர், முடிவுரை எழுதி விடுவார். அக்கட்சியை மீண்டும் பலப்படுத்த வேண்டியது ஜெ., தொண்டர்களுக்கு முக்கிய பணி.

பழனிசாமி முதல்வரானது, கட்சி பொதுச்செயலாளர் ஆனது எல்லாம் லாட்டரி யோகம். தான் சிறைக்கு செல்லாமல் இருப்பதிலும், கொலை, கொள்ளை வழக்கில் கைதாகாமல் இருப்பதற்காக தி.மு.க.வின் 'பி' டீம் போல் செயல்பட்டு கொண்டிருக்கிறார். 2026ம் ஆண்டிற்கு பிறகு கட்சி பொறுப்பை தொடர முடியாமல் ஓடி விடுவார்' என்றார்.

Advertisement