பிரச்னை ஒன்னா... ரெண்டா... அவஸ்தையில் வியாபாரிகள்

மதுரை : மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் இருந்த ஒற்றை கழிப்பறையும் சாக்கடை அடைப்பால் பூட்டப்பட்டதால் வியாபாரிகள் அவஸ்தைப்படுகின்றனர்.

மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன் கூறியதாவது: தரை கடை அருகில் உள்ள ஒரு கழிப்பறையையும் கழிவுநீர் அடைப்பை காரணம் காட்டி பூட்டி விட்டனர்.

அனைத்து கடைகளிலும் சேர்த்து 1500 பேர் உள்ளோம். அதிகாலை முதலே நாங்கள் கடைக்கு வந்து விடுவதால் இயற்கை உபாதையை கழிப்பதற்கு ஒரு கழிப்பறை உதவியது.

கூடுதல் கழிப்பறைகள் கட்ட வேண்டும் என மாநகராட்சியிடம் கேட்ட நிலையில் மத்திய அரசு சார்பில் ஆண், பெண்களுக்கு தலா 7 கழிப்பறைகள் கொண்ட வளாகம் கட்டப்பட்டது. கட்டி முடித்து 2 மாதங்களாகியும் இதுவரை திறக்கவில்லை.

வாடகை கட்டாவிட்டால் கடைகளை பூட்டி 'சீல்' வைக்கும் மாநகராட்சி, அடிப்படை வசதிகளை மட்டும் செய்து தருவதில் அக்கறை காட்டுவதில்லை.

கழிப்பறைகளை திறப்பதற்கு கூட வி.ஐ.பி.,க்கள் தான் வரவேண்டுமா. தாமதமின்றி கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து வியாபாரிகளுக்கு உதவ வேண்டும் என்றனர்.

Advertisement