'நெருக்கடி காலங்களில் அண்டை நாடுகளுக்கு இந்தியா உதவி': ஜெய்சங்கர் பெருமிதம்
மும்பை: '' நெருக்கடி காலங்களில் அண்டை நாடுகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில், நீண்ட காலமாக ரஷ்யாவிற்கு முக்கிய பங்கு உண்டு. கடந்த 1945 முதல் உலகம் பல ஏற்றத்தாழ்வுகளை கண்ட போதும், இந்த உணவானது நிலையாக இருந்து வருகிறது. ஆசியாவை நோக்கி ரஷ்யா தனது கவனத்தை திசைதிருப்பியுள்ளது. இந்தியா ரஷ்யா இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு காரணமாக, உலக பொருளாதாரத்தில் நிலையான விளைவுகள் ஏற்படுகிறது. இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், பல பிராந்தியங்களில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
மற்ற நாடுகளைப் போல், உக்ரைன் போரினால் ஏற்படும் தாக்கங்களை கண்டு இந்தியா பயப்படவில்லை. பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான முயற்சிகளுக்கு தொடர்ந்து இந்தியா ஆதரவாக உள்ளது. மேலும், பிரச்னைகளுக்கான தீர்வு போர்க்களத்தில் காண முடியாது என்பதை சொல்லி வருகிறோம்.
நாடு பிரிவினைக்கு பிறகு, அண்டை நாடுகளுடன் சுமூகமான நட்புறவை கட்டமைப்பதில் இந்தியாவுக்கு சவாலாக உள்ளது. இதனை தாராளமயம் மற்றும் பரஸ்பர அணுகுமுறை, நிதியுதவி, எரிசக்தி, ரயில் மற்றும் சாலை இணைப்புகளுக்கு உதவுவது மூலம் செய்யப்படுகிறது. நெருக்கடி காலங்களில் அண்டை நாடுகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. 2023 ல் நெருக்கடி ஏற்பட்டதை இலங்கை உணர்ந்த போது, 4 பில்லியன் அமெரிக்க டாலர் உதவியை அந்நாட்டிற்கு இந்தியா செய்தது.
வங்கதேசத்தில் தற்போது நாம் காணும் அரசியல் சூழ்நிலைகள், பல சிக்கலான சூழ்நிலைகளை உருவாக்கக்கூடும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதன் மூலம், நமது அண்டை நாடுகளில் பாகிஸ்தான் மட்டும் விதிவிலக்காக உள்ளது. பயங்கரவாத பாதிப்பை பாகிஸ்தான் உணர்ந்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என இந்த துணைக் கண்டம் எதிர்பார்க்கிறது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.