பும்ரா, ஷமி, ஜெய்ஸ்வால் தேர்வு * சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில்...
புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி ஜெய்ஸ்வால் இடம் பெற்றனர்.
ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் (50 ஓவர்) பாகிஸ்தான், துபாயில் பிப். 19-மார்ச் 9ல் நடக்க உள்ளது. ஒருநாள் தரவரிசையில் 'டாப்-8' இடத்திலுள்ள அணிகள் மோத உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடக்க உள்ளன.
இத்தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீபத்திய போட்டிகளில் 'பார்ம்' இல்லாமல் தவிக்கும் ரோகித் சர்மா கேப்டன், சுப்மன் கில் துணைக் கேப்டனாக தொடர்கின்றனர்.
'டி-20', டெஸ்ட் அரங்கில் அசத்தும் ஜெய்ஸ்வால், முதன் முறையாக ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 'சீனியர்' கோலி, ராகுல் இடம் பிடித்தனர். ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரிஷாப் வருகை
விக்கெட் கீப்பர், பேட்டராக ரிஷாப் பன்ட் இடம் பிடித்தார். வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, முதுகுப்பகுதி வலியால், சிட்னி டெஸ்டில் இருந்து பாதியில் விலகினார். இவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. உடற்தகுதிக்கு ஏற்ப, களமிறங்கும் அணியில் சேர்க்கப்படுவார். கடந்த உலக கோப்பை பைனலுக்குப் பின் சர்வதேச போட்டிகளில பங்கேற்காத 'சீனியர்' வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணிக்கு திரும்பியுள்ளார். அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டார்.
சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் என நான்கு பேர் இடம் பிடித்துள்ளனர். வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
யார்... யார்
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், கோலி, ஸ்ரேயாஸ், ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஜெய்ஸ்வால், ரிஷாப் பன்ட், ஜடேஜா, ஹர்ஷித் ராணா (இங்கிலாந்து தொடருக்கு மட்டும்).
கருணுக்கு 'நோ'
விஜய் ஹசாரே டிராபி தொடரில் விதர்பா அணி கேப்டனாக இருந்தார் கருண் நாயர் 33. 8 போட்டியில் 5 சதம், 1 அரைசதம் உட்பட 742 ரன் (112*(108 பந்து), 44*(52), 163*(107), 111*(103), 112(101), 122*(82), 82* (43), 27 (31) குவித்தார். இதில் 6 முறை அவுட்டாகாமல் இருந்தார்.
சராசரி 752.0 ரன்னாக உள்ளது. இதனால் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதுகுறித்து தேர்வுக்குழுத் தலைவர் அகார்கர் கூறுகையில்,'' கருண் நாயர் சிறப்பாக விளையாடுகிறார். ஆனால் 15 பேருக்கு மட்டும் தான் இடம் என்பதால், சேர்க்க முடியவில்லை,'' என்றார்.
இங்கிலாந்து தொடரில் ஹர்ஷித்
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன், இந்திய அணி சொந்தமண்ணில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் (பிப்ரவரி 6, 9, 12) பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணியில் மட்டும் கூடுதலாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டார். முதல் இரு ஒருநாள் போட்டியில் பும்ரா பங்கேற்க மாட்டார்.