தொழில்நுட்பத்தில் செயலிழந்த நகர கூட்டுறவு வங்கிகள்
மதுரை: தேசிய வங்கிகள், தனியார் வங்கிகளுடன் தொழில்நுட்பத்தில் போட்டியிட முடியாத நிலையில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைத்து மண்டலமாக்கினால் வளர்ச்சியை நோக்கி செல்லும்.
தமிழகத்தில் 128 நகர கூட்டுறவு வங்கிகள் உள்ளன. அதில் 7 வங்கிகள் எல்.ஐ.சி., பி.எச்.எல்., போர்ட் டிரஸ்ட் போன்ற பணியாளர்கள் கூட்டுறவு வங்கிகளாக செயல்படுகிறது. மீதியுள்ளவை அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்காக தொடங்கப்பட்டது. தேசிய வங்கிகள், தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும் போது நகர கூட்டுறவு வங்கிகள் தொழில்நுட்பத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. தொழில்நுட்பத்திற்கான சாப்ட்வேர் இணைக்கப்பட்டாலும் வாடிக்கையாளர்களுக்கான செயல்பாட்டில் தற்போது வரை சுணக்கமாக உள்ளது என்கின்றனர் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்மேளனம் (தமிழ்நாடு) மாநில தலைவர் தமிழரசு, பொதுச்செயலாளர் சர்வேசன்.
அவர்கள் கூறியதாவது
:
நகர கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை ஆண்டு பரிமாற்றம் ரூ.10 கோடியிலிருந்து ரூ.300 கோடி வரை உள்ளது. சமீபத்தில் சாப்ட்வேர் தொழில்நுட்பம் கூட்டுறவு வங்கிகளில் இணைக்கப்பட்டாலும் வாடிக்கையாளர்களின் 'கே.ஒய்.சி.' விதிமுறைகள் முழுமையாக இணைக்கப்படவில்லை. வாடிக்கையாளர்களின் விவரங்களை முழுமையாக பின்பற்றவில்லை என்பதால், 3 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்தது. முசிறியில் உள்ள வங்கி கலைக்கப்பட்டு விட்டது. சிறு வங்கிகளால் ரிசர்வ் வங்கியின் நடைமுறைகளை பின்பற்ற முடியவில்லை. 'சாப்ட்வேர் டெண்டர்' நடைமுறையில் வங்கிகளை வெளிப்படை தன்மையுடன் நடத்த தமிழக அரசு தயாராக இல்லை. சரியான நிறுவனத்திடம் 'சாப்ட்வேர்' தொழில்நுட்பத்தை ஒப்படைத்தால் வங்கிகள் தேசிய வங்கிகளுக்கு இணையாக மாறிவிடும்.
மண்டலமாக பிரிக்க வேண்டும்
ஒவ்வொரு வங்கியிலும் செயல் ஆட்சியர் என்ற நிலையில் சார் பதிவாளர் அல்லது துணை பதிவாளர்களுக்கான சம்பளம், பிற விவரங்களை வங்கியில் இருந்து தான் எடுக்கின்றனர். அதுவே பெருந்தொகையாக உள்ளது. இங்கு விவசாய கடன்கள் பெரும்பாலும் தருவதில்லை. சிறுவணிகக்கடன், நகைக்கடன்கள் தான் அதிகம் வழங்கப்படுகின்றன. அருகிலுள்ள மாவட்டங்களின் வங்கிகளை ஒருங்கிணைத்து மண்டல நகர கூட்டுறவு வங்கியாக மாற்றினால் நிர்வாகச் செலவும் குறையும். வங்கிகளும் வளர்ச்சியை நோக்கி செல்லும்.
கருத்துக் கேட்பு கூட்டம் போல பணியாளர்களின் கருத்துக்களை உள்வாங்கி தமிழக அரசு செயல்படுத்தினால் நகர கூட்டுறவு வங்கிகள் லாபம் ஈட்டும் வலிமையான வங்கிகளாக மாறும் என்றனர்.