கடனை வசூலிக்க நிதி நிறுவனங்கள் அராஜகம் வேறு இடங்களுக்கு குடிபெயரும் மக்கள்

4

ஹாவேரி: சிறிய நிதி நிறுவனங்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஏற்கனவே மைசூரு, சாம்ராஜ்நகர் போன்ற மாவட்டங்களில் பணம் வாங்கியோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஹாவேரி, ஆடவி ஆஞ்சநேயா லே - அவுட்டில் ரனெபேன்னூர் உள்ளது. இங்கு வசிப்போர், பெரும்பாலும் கூலி வேலைகளே செய்கின்றனர். இவர்களை குறிவைத்து, நிதி நிறுவனங்கள், 20 ஆயிரம் முதல் லட்சம் ரூபாய் வரை, தகுதிக்கேற்ப கடன் தொகையை வழங்குகின்றன.

பலரும் தங்கள் தேவைக்காக, வட்டியை பற்றி கவலைப்படாமல் கடன் வாங்குகின்றனர். இந்த பணத்தை வைத்து, தங்களது பிள்ளைகளின் பள்ளி கட்டணம், அடகு வைத்த தங்க நகைகளை மீட்பது, ஏற்கனவே வாங்கிய கடனை அடைப்பது என பல வகைகளில் செலவு செய்கின்றனர்.

இந்த கடன் தொகையை வாரம், மாதம் என தவணை முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும். பணத்தை கட்ட சிலர் தவறும்போது, நிதி நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் வீட்டிற்கு முன் வந்து அநாகரீகமாக நடந்து கொள்கின்றனர்.

சிலர் ஆபாச வார்த்தைகளால் திட்டுகின்றனர். இதனால், பாதிக்கப்பட்டோர் பலர், வேறு ஊர்களுக்கு இடம் பெயருகின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பூட்டுகள் தொங்குகின்றன.

இதுகுறித்து சில பெண்கள் கூறியதாவது:

வீட்டு பிரச்னை, கடன் தொல்லை காரணமாக நிதி நிறுவனத்திடம் கடன் வாங்குகிறோம். எப்போதாவது தவணையை கட்ட தவறினால், ஊழியர்கள் வீட்டின் முன் நாற்காலியில் அமர்ந்து கொண்டு ரவுடித்தனம் செய்கின்றனர்.

மற்றவர்கள் முன் அசிங்கப்படுத்துவர். ஊழியர்கள் பணத்தை வசூல் செய்யவில்லை என்றால், அவர்களுக்கு அலுவலகத்தில் பிரச்னை எழும். இதனால், அவர்கள் எங்களிடம் கண்டிப்புடன் நடந்து கொண்டு பணத்தை வசூல் செய்கின்றனர்.

சிலர் வரைமுறையை தாண்டி நடந்து கொள்கின்றனர். இத்தகையோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement