தந்தை வழியில் இலக்கிய செம்மல் ஆன தனயன்
தங்கவயல் தங்கம் மட்டுமல்ல, தமிழ் விளைந்த நிலமும் கூட. இங்கு பல இலக்கிய மேதைகள் பேராசிரியர்கள், புலவர்கள் தங்கி, தமிழ் வளர்த்தனர். தமிழுணர்வை தட்டி எழுப்பினர். தமிழிலக்கிய பெருமைகளை காத்தனர்.
தங்கவயலில் வாழ்ந்த தமிழறிஞர்களில் பன்மொழிப் புலவர், பண்டிதமணி க.அப்பாதுரையார், புலவர் அய்யாக்கண்ணு வரிசையில் மறக்க இயலாதவர் பேராசிரியர் வ.பெருமாள்.
தஞ்சையை சேர்ந்தவர். ஹைதராபாத், தமிழகத்தின் கல்லுாரிகளில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றியவர். 1963 ல் தங்கவயல் முதல் நிலைக் கல்லுாரியில் பேராசிரியராக, தமிழ்த் துறை தலைவராக விளங்கியவர்.
தமிழ் மாநாடு
தமிழக அரசு நடத்திய அனைத்து உலகத் தமிழ் மாநாடுகளில் பங்கேற்றவர். மாநாட்டு மலர்களில் தமிழாய்வு கட்டுரைகள் எழுதியவர். 1992, அக்டோபர் 17ல் பணி ஓய்வின்போது அவருக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது நன்றி சொல்ல ஒலிபெருக்கி முன் நின்ற போது மயங்கி விழுந்தார். மாரடைப்பால் மரணம் அடைந்தார். இறுதி மூச்சுவரை தனது பேனாவுக்கு ஓய்வு கொடுக்காதவர் என்பதை தனது வாழ்நாளில் நிரூபித்து வாழ்ந்துக்காட்டியவர்
தமிழிலக்கிய வரலாற்றில் உலகறிந்த சான்றோர்; தமிழறிஞர்; பண்பாளர். தனது இல்லத்திற்கு 'பண்பகம்' என பெயர் வைத்தவர்.
இலக்கிய வாரிசு
இவரின் மகன் இலக்கிய வாரிசாக, தமிழ்ப் பேராசிரியராக, சமூக விஞ்ஞானியாக விளங்குபவர் பேராசிரியர் கணேஷ். 59. பல்வேறு கல்லுாரிகளில் தமிழ்ப்பேராசிரியராகவும், சமூகவியல் பேராசிரியராகவும் உள்ளார். ஆங்கிலத்தில் 15 நுால்கள், தமிழில் 10 நுால்கள் எழுதி உள்ளார்.
இவரின் நுால்கள் பாட நுால்களாகவும் உள்ளன. இவரின் 30 ஆண்டு கால இலக்கிய மற்றும் சமூக சேவை, சிறந்த ஆசிரியர், ஆராய்ச்சி கட்டுரை, நுால், ஆளுமைத்திறன், மக்கள் தொடர்பாளர் என 100க்கும் மேற்பட்ட பரிசுகள் விருதுகள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''இன்னும் எழுதுவேன். தமிழுக்கு தொண்டு செய்வேன்,'' என்கிறார்.
- நமது நிருபர் -