'சிவகுமார் முதல்வரானதும் காங்., தலைவர் மாற்றப்படுவார்'
ராம்நகர்: ''துணை முதல்வர் சிவகுமார், முதல்வரான பின் மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா தெரிவித்தார்.
ராம்நகர், பிடதியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து, கட்சி மேலிடம், சரியான நேரத்தில் முடிவு எடுக்கும். கட்சியில் யாரும், துணை முதல்வர் சிவகுமாரை குறிவைக்கவில்லை. துணை முதல்வர் சிவகுமார், முதல்வரான பின், மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார்.
பிற கட்சிகளை போன்று, காங்கிரஸ், ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. எங்களில் பலருக்கு முதல்வராகும் தகுதி உள்ளது. தேர்தலில் ஏழெட்டு முறை வெற்றி பெற்றுள்ள மூத்த எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இச்சூழ்நிலையில் தலைமை பதவிக்கு போட்டி ஏற்படுவது சகஜம்தான்.
காங்கிரஸ் மேலிடம் வலுவாக உள்ளது. அனைத்தையும் சரி செய்யும். டின்னர் பார்ட்டி ஏற்பாடு செய்வது தவறல்ல. பேச்சு சுதந்திரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும் கட்சி எங்களுடையது அல்ல.
கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்படும் வகையில் பேச வேண்டாம் என, கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. சில அமைச்சர்கள் தங்களின் தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர். தேசிய கட்சிகளில் இதுபோன்ற நிலவரங்கள் சகஜம் தான்.
பட்ஜெட் தாக்கலுக்கு பின், அமைச்சரவை விஸ்தரிக்கப்படும் வாய்ப்புள்ளது. முதல்வரும், துணை முதல்வரும் என் அனுபவம், சீனியாரிட்டியை அடையாளம் கண்டு, அமைச்சரவையில் வாய்ப்பளிப்பர் என, நம்புகிறேன். ஆனாலும் மேலிடத்தின் முடிவே இறுதியானது.
'முடா' விஷயத்தில் அமலாக்கத்துறை விசாரணை அவசியமே இல்லை. நிதி விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டால் மட்டுமே, அமலாக்கத்துறை தலையிடலாம்.
ஆனால் மத்திய பா.ஜ., அரசு, முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில், அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.