மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகைக்காக புதிய ரேஷன் கார்டுக்கு குவியும் விண்ணப்பம்
சென்னை: மகளிர் உரிமை தொகை வழங்குவதில், விடுபட்டோருக்கு மீண்டும் விண்ணப்ப படிவம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, தனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, தற்போது பலரும், பெற்றோர் கார்டில் உள்ள தங்களின் பெயரை நீக்கம் செய்ய விண்ணப்பித்து வருகின்றனர்.
தமிழக அரசு, மகளிருக்கு மாதம், 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, 2024 செப்டம்பரில் துவக்கியது. இதற்காக பயனாளிகளை தேர்வு செய்ய, அந்தாண்டு ஜூலையில், 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களிடம் விண்ணப்பங்கள் வழங்கியது.
அதில் உரிமை தொகை கேட்டு, 1.63 கோடி பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், அரசு விதித்த நிபந்தனைகள் அடிப்படையில், 1.15 கோடி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
நடவடிக்கை
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே, விடுபட்டோருக்கும் மாதம், 1000 ரூபாய் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மீண்டும் விண்ணப்பம் வழங்கி, பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதுதொடர்பாக, துணைமுதல்வர் உதய நிதி, 'மகளிர் உரிமை தொகை பெற, கடந்த முறை விண்ணப்பிக்க இயலாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், திட்டத்தின் விதிகளை பூர்த்தி செய்யும் மகளிர் அனைவருக்கும் உரிமை தொகை வழங்கவும், மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்' என, சட்டசபையில் இம்மாதம் 8ம் தேதி அறிவித்தார்.
ஒப்புதல்
இதனால் மாதம், 1000 ரூபாய் பெற, தனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, பெற்றோர் கார்டில் உள்ள பெயரை நீக்க, பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மகளிர் உரிமை தொகைக்கு ரேஷன் கார்டு அவசியம். தற்போது, பெற்றோர் கார்டில் இருந்து தங்களின் பெயரை நீக்கக்கோரி, அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர். அதன் வாயிலாக, புதிய ரேஷன் கார்டு பெற விரும்புகின்றனர்.
தனி முகவரியில், தனி சமையல் காஸ் இணைப்புடன் வசிப்பது உள்ளிட்ட தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். மின் ஆளுமை முகமை வாயிலாக, ஒரு முறைக்கு பல முறை விண்ணப்பம் பகுப்பாய்வு செய்யப்பட்ட பின், பெயர் நீக்கம், புதிய கார்டுக்கு ஒப்புதல் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.