தங்க கட்டிகள் வாங்கி தருவதாக கூறி மோசடி; அரசு அதிகாரிகளாக நடித்த இருவர் கைது

4



சென்னை : திருச்சி தில்லைநகர் முதல் கிராஸ், மேற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் பிரவீன் 38. திருச்சியில் பிரபல நகைக்கடை இயக்குனர்.


தொழில் நிமித்தமாக திருச்சியில் உள்ள ஜி.எஸ்.டி., அலுவலகத்துக்கு சென்று வரும்போது மயிலாடுதுறையை சேர்ந்த குருசம்பத்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தன்னை ஆடிட்டர் எனக்கூறி அறிமுகமாகியுள்ளார்.


அவர் மூலம் புதுச்சேரியை சேர்ந்த லட்சுமிநாராயணன் என்பவருடன் பிரவீனுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. வருமான வரித்துறையில் பணிபுரிவதாக லட்சுமிநாராயணன் கூறியிருந்தார்.
Latest Tamil News

வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் தங்க கட்டிகளை குறைவான விலைக்கு வாங்கித்தருவதாக இருவரும் பிரவீனிடம் தெரிவித்துள்ளனர். அதை நம்பிய பிரவீன் 2021ம் ஆண்டு ரூ.40 லட்சத்தை ரொக்கமாக கொடுத்தார். ஆனால் இருவரும் தங்க கட்டிகளை வாங்கிக்கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்தனர். பணத்தை தொடர்ந்து கேட்டதால் இருவரும் சேர்ந்து பிரவீனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.


பிரவீன், சென்னை பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். யானை கவுனி போலீசார் குருசம்பத்குமார், லட்சுமிநாராயணனை கைது செய்தனர். கார், 3 அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் தங்களின் காரில் உள்ள நம்பர் பிளேட்டில் அரசு வாகனங்களில் இருப்பதை போன்று 'அ' என்ற எழுத்தை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


மேலும் தமிழக அரசின் சின்னத்துடன் கூடிய போலியான வி.ஐ.பி., பாஸ் தயாரித்து, காரின் முன் பகுதியில் ஒட்டி வைத்திருந்தனர். இந்த காரை பயன்படுத்தி பலரிடம் நம்பிக்கையை வரவழைத்து தொடர்ந்து பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.


இவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement