டில்லி 'உஷ்ஷ்ஷ்!'; 'தமிழர் பட்ஜெட்டா இது?'


அடுத்த மாதம் 1ம் தேதி, மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் தாக்கல் செய்வார். இது தொடர்பாக இதுவரை, நான்கு கூட்டங்களை நடத்தி விட்டாராம் பிரதமர் மோடி.


பா.ஜ.,வின் லோக்சபா தேர்தல் அறிக்கை இந்த பட்ஜெட்டில் எதிரொலிக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்தாராம். பட்ஜெட் தயாராகிவிட்ட நிலையில், இந்த மாத கடைசியில், இறுதியாக ஒரு கூட்டம் நடத்த உள்ளாராம் மோடி; அப்போது பட்ஜெட் உறுதி செய்யப்படும்.


நிதியமைச்சர் இதுவரை ஆறு முழு பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார்; இது ஏழாவது பட்ஜெட். இப்படி தொடர்ச்சியாக ஏழு பட்ஜெட்களை தாக்கல் செய்து சாதனை புரிய உள்ளார். இதற்கு முன்னதாக, மொரார்ஜி தேசாய் தொடர்ச்சியாக ஆறு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.


இதுவரை ஆறு முழு பட்ஜெட்களுடன், இரண்டு இடைக்கால பட்ஜெட்களையும் தாக்கல் செய்தவர் நிர்மலா சீதாராமன். மத்திய அரசின் பட்ஜெட் விஷயத்தில், தமிழர்களின் பெருமை அதிகம். சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை 1947 நவம்பரில் தாக்கல் செய்தவர், ஆர்.கே.சண்முகம் செட்டியார்.


பின், சி.சுப்ரமணியம் இரண்டும் முறை, ஆர்.வெங்கட்ராமன் இடைக்கால பட்ஜெட் உட்பட மூன்று முறை, சிதம்பரம் எட்டு முறை என, அதிக அளவில் நம்ம ஊர் அமைச்சர்கள் தான் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.


ஏற்கனவே நிதிச் செயலராக இருந்தவர் டி.வி.சோமநாதன்; தற்போது இவர் கேபினட் செயலராக உள்ளார். பல பட்ஜெட் தாக்கலில் இவருடைய பங்கு அதிகம். எனவே, இவரையும் பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில் அழைத்து, பங்கு பெற வைத்தாராம் மோடி. வழக்கமாக கேபினட் செயலர் பட்ஜெட் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க மாட்டார். ஆனால், சோமநாதனின் திறமையை மதித்து, அவருடைய ஆலோசனையும் கேட்டுக் கொண்டாராம் பிரதமர்.


'இதென்ன தமிழர் பட்ஜெட்டா' என, டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் கிண்டலாக பேசப்படுகிறது.

Advertisement