டில்லி 'உஷ்ஷ்ஷ்!'; இந்திராவை அடுத்து சோனியா?

4



வட மாநிலங்களில், தற்போது ஒரு சினிமா அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ., - எம்.பி.,யும், நடிகையுமான கங்கனா ரணாவத்தின், எமர்ஜென்சி திரைப்படம் தான் அது. இதில், முன்னாள் பிரதமர் இந்திரா வேடத்தில் நடித்துள்ளார் கங்கனா. எமர்ஜென்சி சமயத்தில் நடந்த கொடுமைகளையும், அரசியல் விஷயங்களையும் இந்த படத்தில் சொல்லி இருக்கின்றனர்; பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, எமர்ஜென்சி வெளியிடப்பட்டது.


அரசியல் தலைவர்கள் வேடங்களை ஏற்று நடிப்பதில் வல்லவர் கங்கனா. ஏற்கனவே, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக, குயின் படத்தில் நடித்துள்ளார். பா.ஜ., ஆளும் மாநிலங்கள், எமர்ஜென்சி திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளன.


எமர்ஜென்சியின்போது நடந்த அட்டூழியங்களை, பா.ஜ.,வினர் அடிக்கடி மக்களுக்கு நினைவுபடுத்தி, காங்கிரசை கடுப்பேற்றி வருகின்றனர். ஒடிசா மாநில பா.ஜ., முதல்வர் மோகன் சரண் மஜி, ஒருபடி மேலே போய், இந்த அவசர சட்ட காலத்தின்போது, சிறையில் இருந்த, 700 பேருக்கு பென்ஷன் வேறு அறிவித்துள்ளார்.


இந்திராவை அடுத்து, சோனியா வேடத்தில் கங்கனா நடிக்கப் போவதாக செய்திகள் அடிபடுகின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், தேசிய ஆலோசனை குழு என ஒன்றை துவங்கி, அதன் தலைவராக இருந்தவர், சோனியா.


'இந்த பதவி, சூப்பர் பிரதமர் பதவி' என, அப்போது சொல்லப்பட்டது. 'மன்மோகன் சிங் பிரதமராக இருந்தாலும், சோனியா சொல்வதைக் கேட்டுதான் ஆட்சி நடத்தி வந்தார்' என, குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரங்களை எல்லாம், தன் புதிய படத்தில் கொண்டுவர விரும்புகிறாராம் கங்கனா. ஆனால், 'இது சாத்தியமா?' என, பல பா.ஜ., தலைவர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. காரணம், 'இந்த புதிய பட விவகாரம், நீதிமன்றம் வரை செல்லும்' என்கின்றனர். எது எப்படியோ, அரசியல் தலைவர்களின் ஆட்டங்களை, திரையில் காட்ட முடிவெடுத்துவிட்டார் கங்கனா.

Advertisement