திருப்பரங்குன்றம் மலையின் புனிதம் கெடுக்க ஆடு அறுக்க வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் தள்ளுமுள்ளு
திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில், தடையை மீறி அறுப்பதற்காக ஆட்டுக்குட்டியுடன் வந்த முஸ்லிம்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கடந்த மாதம் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவில் முஸ்லிம் ஒருவர் ஆடு பலியிட முயன்றதை போலீசார் தடுத்தனர். இவ்விவகாரத்தை திசை திருப்பும் வகையில் 'தர்காவில் வழிபடுவதை தடுப்பதாக' சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன. 'வழிபட தடை இல்லை. ஆடு பலியிடும் விவகாரம் குறித்து கோர்ட்டில் தீர்வு காணுமாறு' அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் பிரச்னை நீடித்து வருகிறது. நேற்று சில முஸ்லிம் அமைப்புகள் ஆடு பலிகொடுத்து விருந்து நடத்த திரண்டனர். டி.ஆர்.ஓ., சக்திவேல், ஆர்.டி.ஓ., ராஜகுரு, தெற்கு தாசில்தார் ராஜபாண்டி, போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். உணவு மட்டும் எடுத்துச்செல்வதாக கூறினர். ஆனால் அதில் மாமிசம் இருக்க வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் முஸ்லிம் அமைப்பினர் ஆட்டுக்குட்டியுடன் மலை மேல் செல்ல ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பினர்.
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டியும், மலையின் புனிதத்தை காக்க வேண்டியும் திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள தங்கவேலுக்கு பாலாபிஷேகம், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன், அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம், அகில பாரத ஹிந்து மகா சபா சஞ்சீவிகுமார், அமைப்பு செயலாளர் கார்த்திக், நிர்வாகிகள் வினோத்குமார், செல்வம், மலை பாதுகாப்பு இயக்கத்தினர் பங்கேற்றனர்.