அசுர வேகத்தில் வரும் குவாரி லாரிகள்
சிவகாசி: சிவகாசி அருகே விளாம்பட்டியில் அசுர வேகத்தில் வருகின்ற லாரிகளால் பள்ளி மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பள்ளி துவங்கும், முடியும் நேரத்தில் லாரிகளை மெதுவாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரம் பகுதியில் கிரஷர் குவாரி உள்ளது. இங்கு தினமும் விளாம்பட்டி மாரனேரி வழியாக ஜல்லி, கிராவல் துாசி எடுப்பதற்காக 100க்கும் மேற்பட்ட முறை லாரிகள் வந்து செல்கின்றன. விளாம்பட்டியில் ஊருக்குள் ரோடு மிகவும் குறுகலாக உள்ளது.
இதில் சாதாரணமாகவே வாகனங்கள் சிரமபட்டுத்தான் சென்று வர வேண்டி உள்ளது. இங்கு ரோட்டின் அருகே இரு பள்ளிகள் உள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கற்கள் ஏற்றி வரும் லாரிகள் அசுர வேகத்தில் வந்து செல்கிறது. காலை, மாலை நேரங்களில் இது போன்று வேகமாக வரும் லாரிகளால் பள்ளி மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
சைக்கிளில், நடந்து வரும் பள்ளி மாணவர்கள் பயத்தில் கீழே விழுகின்றனர். எனவே வேகமாக வரும் லாரிகளை மெதுவாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.