நேரடி பஸ்கள் இயக்க அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் ராஜபாளையத்தில் தலா 2 என மொத்தம் 9 அரசு பஸ் டிப்போக்கள் உள்ளது. இவற்றின் மூலம் பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய நகரங்களில் இருந்து மதுரைக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதில் ராஜபாளையத்தில் இருந்து பஸ்கள் புறப்படும் போதே இருக்கைகள் நிரம்பி விடுவதால் ஸ்ரீவில்லிபுத்துார், கிருஷ்ணன் கோவில், நத்தம்பட்டி, அழகாபுரி பகுதி மக்கள் நின்று கொண்டே விருதுநகர், மதுரை, தேனி நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதேபோல் சிவகாசியில் இருந்து புறப்பட்டு வரும் பஸ்களில் திருத்தங்கல், ஆமத்தூரில் இருக்கைகள் நிரம்பி விடுவதால் விருதுநகர் மக்கள் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதேபோல் கோவில்பட்டியில் இருந்து புறப்பட்டு வரும் பஸ்கள் அங்கேயே நிரம்பி விடும் நிலையில் சாத்துார், ஆர்.ஆர். நகர், கலெக்டர் அலுவலகம் பகுதி மக்கள் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதேபோல் அருப்புக்கோட்டையில் இருந்து புறப்பட்டு வரும் பஸ்கள் பழைய , புதிய பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் நிரம்பி விடும் நிலையில் காரியாபட்டி மக்கள் நின்று கொண்டு தான் மதுரைக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதில் ஸ்ரீவில்லிபுத்துார் டிப்போ பஸ்கள் இங்கிருந்தே மதுரைக்கு புறப்படாமல் ராஜபாளையம் சென்று அங்கிருந்துதான் பயணிகளை ஏற்றிக்கொண்டு வருகின்றனர். இதேபோல் தான் சாத்துார் டிப்போ பஸ்களும் கோவில்பட்டி சென்று அங்கிருந்து புறப்பட்டு மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.

34 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகை 15 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தபோதே ஸ்ரீவில்லிபுத்துாரில் அரசு பஸ் டிப்போ உருவாக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டநிலையில் தற்போது 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில் இன்னும் நேரடியாக விருதுநகர், மதுரை, தேனி நகரங்களுக்கு நேரடியாக பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது. இதே நிலைதான் சாத்துார், விருதுநகர், காரியாபட்டி மக்களுக்கும் உள்ளது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வத்திராயிருப்பில் துவக்கப்பட்ட அரசு பஸ் டிப்போவில் இருந்து தற்போது பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை, கோவை செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால், ஸ்ரீவில்லிபுத்துார், சாத்துார், காரியாபட்டி நகரங்களில் இருந்து புறப்படும் வகையில் சென்னை, கோவைக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

எனவே, ஸ்ரீவில்லிபுத்துார், சாத்துார், விருதுநகர், காரியாபட்டி நகரங்களில் இருந்து புறப்பட்டு மதுரை, தேனி, திருச்சி, கோவை, சென்னை நகரங்களுக்கு சென்று திரும்பும் வகையில் நேரடி பஸ்கள் இயக்க அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement